`போலீஸை பொருட்படுத்தாமல் அடிதடி’ – பா.ம.க, எம்.எல்.ஏ அருள் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வடுகம்பட்டி பகுதியில் கட்சியின் நிர்வாகி துக்க நிகழ்விற்கு, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்று கலந்து கொண்டனர். பின்னர், பாமக மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேலம் நோக்கி வந்து கொண்டிருக்கும்போது, அன்புமணி ஆதரவாளர்கள் காரை வழிமறித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து அன்புமணி ஆதரவாளர்கள் சிலர், அருள் எம்.எல்.ஏ கார் உட்பட ஆதரவாளர்களின் கார்கள் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அருள் ஆதரவாளர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கல் வீசியும் கட்டையாலும் தாக்கிக் கொண்டனர்.

எம்எல்ஏ ஆதரவாளர்கள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரிடமும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போலீசாரைத் தள்ளிவிட்டு தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளார்.