“SIR வாக்குரிமை பற்றியது அல்ல, குடியுரிமையை குறிவைக்கிறது பாஜக” – திருமாவளவன் கடும் விமர்சனம்

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளவிருக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது. திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் SIR நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவரும் சூழலில், இது தொடர்பாக விவாதிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டியது தமிழ்நாடு அரசு.

தேர்தல் ஆணையம்

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இது வாக்குரிமை பற்றியது அல்ல குடியுரிமை மீதான தாக்குதல் எனவும் மறைமுகமாக NRC-ஐ நடைமுறைப்படுத்த பாஜக தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

திருமாவளவன் பேசியதாவது:

“இது வாக்குரிமையை குறிவைத்து நிகழ்த்தப்படுகிற ஒரு தாக்குதல் அல்ல. குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற ஒரு தாக்குதல். இந்த அரசியல் புரிதல் நமக்கு தேவை!

குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைக் கேட்கும்போது “ஆதார அட்டை வேண்டாம்” என்று சொல்வதற்கு அவர்கள் சொல்லுகிற காரணம் ‘இது குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கானது அல்ல’ என்பதுதான். (வாக்காளர் அடையாள அட்டை குடியுரிமையை உறுதிபடுத்துவதாகும்).

Voters
Voters

SIR நடைமுறைக்கு 2002 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் அதை பொருத்தி பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள் அதாவது கால அளவை சொல்லுகிறார். 1987க்கு முன்பு பிறந்திருந்தால் பிறந்த தேதி முகவரி தந்தை பெயர் உள்ளிட்ட ஆதாரங்களை காட்ட வேண்டும். 87லிருந்து 2004க்குள் பிறந்திருந்தால் இந்தியாவில் பிறந்திருந்தால் அதற்குரிய பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் நிரூபிக்கும் ஆவணத்தை அளிக்க வேண்டும்.

குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாக இவர்கள் மறைமுகமாக தேர்தல் ஆணயத்தை பயன்படுத்தி, குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்துவது NRC உருவாக்குவதுதான் இப்போது அவர்களுடைய முக்கியமான நோக்கம்.

இந்த தேர்தல் வெற்றியோ அல்லது இந்த வாக்குரிமையை பறிப்பது என்பதோ அவர்களுடைய நோக்கம் இல்லை. அவர்களின் இறுதி இலக்கை அடைவதற்கு NRC (National Register of Citizens) தேவைப்படுகிறது. NRCயை நடைமுறைப்படுத்துவதற்கு தேர்தல் ஆணயத்தை பயன்படுத்துகிறார்கள். இந்த அரசியல் புரிதலோடு தான் இதை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம்.

அசாம் என்.ஆர்.சி
அசாம் என்.ஆர்.சி

அதாவது தேர்தல் ஆணயம் இந்த வேலையை செய்றதுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. இதுக்கு பீப்பிள் ரெப்ரசென்டேடிவ் ஆக்ட் தான் இருக்கு. அதன் மூலம்தான் வந்து வாக்காளர் பட்டியல சரி செய்யணும். ஏற்கனவே Deletion, Adition, Correction இந்த வேலைகள் நடந்துகிட்டுதான் இருக்குது. எல்லா காலத்திலும், ஒவ்வொரு தேர்தலின் போது நடக்குது.

துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்

SIR இன்னைக்கு எதுக்காக கொண்டு வந்திருக்காங்கன்னு சொன்னா, குடியுரிமையை பறிப்பதற்கு, NRCயை நடைமுறைப்படுத்துவதற்காகதான் இந்த வேலை திட்டத்தை அறிவிச்சிருக்காங்க. இதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான செய்தி. இதை நாம் எதிர்கொள்வதற்கு அரசியல் ரீதியிலான துணிச்சலா சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கிறது.

திருமாவளவன்
திருமாவளவன்

இந்த வாக்காளர் பட்டியலை சரி பண்றது கூட கைட்லைன்ஸ் இல்லைங்கறது ஒரு புறம். அதைவிட முக்கியமா தேர்தல் நடக்கிற அந்த காலத்தில் ஒரு ஆண்டில் இதை செய்யக்கூடாதுங்கறது சட்டம் இருக்கு. அதுக்கான ஆக்ட் இருக்கு முன்னால ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடத்தணும் அல்லது ஒரு தேர்தலுக்கு பின்னால நடத்தணும்.

தேர்தல் நடத்தி முடித்து செய்ய சொல்லலாம் இல்லன்னா உச்சநீதிமன்ற தீர்ப்பு வரட்டும் இந்த வழக்கு முடியட்டும் அதுக்கு பிறகு செய்யன்னு சொல்லலாம் என்ஆர்சிய நடைமுறைப்படுத்துவதற்காக செய்றீங்க அதனால இத இப்ப வந்து நடைமுறைப்படுத்த கூடாது நாங்க இதை கடுமையா எதிர்க்கிறோம்.” என்றார் திருமாவளவன்.