சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை, அமலாக்கத்துறை முடக்கியது சரியானதுதான் என்று ‘பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம்’ (PMLA) உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.

2007 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அப்போதைய சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
அப்போது பீட்டர் முகர்ஜி, இந்திராணிக்கு சொந்தமான ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் ரூ 300 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற்றது. அதற்காக விதிமுறைகளை மீறி வெளிநாட்டு முதலீட்டு மேம்பாட்டு வாரியம் மூலம் அந்நிய முதலீட்டைப் பெற ப.சிதம்பரம் அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த முறைகேட்டை மறைக்க ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், தனக்குச் சொந்தமான நிறுவனங்கள் மூலம் உதவி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்பந்தமாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை, 2018 ஆம் ஆண்டில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ 54 கோடி மதிப்பிலான சொத்துகளையும், வங்கிக் கணக்கையும் முடக்கியது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று, ‘பணமோசடி தடுப்புச்சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாய’த்தில் (PMLA) கார்த்தி சிதம்பரம் மேல்முறையீடு செய்திருந்தார். “சொத்துகளை பறிமுதல் செய்ததில் எந்த விதிமீறலும் இல்லை. உச்ச நீதிமன்றத்தின் முந்தைய அறிவுறுத்தலின்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தீர்ப்பாயத்தில் அமலாக்கத்துறை வாதிட்டதைத் தொடர்ந்து, கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியதை உறுதி செய்த தீர்ப்பாய உறுப்பினர்கள் மேல்முறயீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
