உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பூஜா கவுல் என்ற பெண் மும்பை டாடா கல்லூரியில் முதுகலைப்பட்டம் படித்துள்ளார். அவர் கல்லூரியில் படிக்கும்போது புராஜெக்டாக செய்த ஒன்றை இன்றைக்கு தனது தொழிலாக மாற்றி இருக்கிறார்.
பூஜா இது குறித்து கூறுகையில், ”நான் கல்லூரியில் படித்தபோது தொழிலாளர்கள் தங்களது கழுதைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அழைத்து செல்வதை பார்த்தேன். அந்த கழுதைகளை அதன் உரிமையாளர்கள் பெரிய அளவில் கவனிப்பது கிடையாது.
ஆனால் கழுதை பாலில் அதிக அளவு சத்துக்கள் இருப்பதை அறிந்து கொண்டேன். அதனை கொண்டு எதாவது செய்யலாம் என்று திட்டமிட்டு செயலில் இறங்கினேன். கழுதைகளை வைத்திருக்கும் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடி இடம்பெயர்கின்றனர்.
நாள் முழுவதும் உழைத்தாலும், அவர்கள் ரூ.300–400 மட்டுமே சம்பாதிக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு முக்கியமான விளங்கும் இந்த விலங்குகள், பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு, போதுமான அளவு உணவளிக்கப்படுவதில்லை, குறிப்பாக மழைக்காலங்களில் கட்டுமான வேலைகள் இல்லாதபோது கழுதைக்கு சரியாக உணவு கொடுப்பதில்லை. எனவே கழுதை வளர்க்கும் குடும்பத்துடன் சேர்ந்து அவர்களது பொருளாதாரத்திற்கு உதவ முடிவு செய்தேன்.
இதற்காக கழுதை உரிமையாளர்களை அனுகி பேசியபோது அவர்கள் நான் பில்லி சூனியம் வைக்க இந்த பாலை கேட்பதாக நினைத்தனர். அதோடு கழுதை இறந்துவிடும் என்றும் நினைத்தனர். நான் அவர்களிடம் பேசி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த எனக்கு 6 மாதம் எடுத்துக்கொண்டது. கல்லூரியில் படித்துக்கொண்டே கழுதை பாலை பயன்படுத்தி சோப்பு தயாரிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் கோவா செல்ல சேமித்து வைத்திருந்த ரூ.26 ஆயிரத்தை பயன்படுத்தினேன். இது தவிர எனது நண்பர்களிடம் ரூ.34 ஆயிரம் கடன் வாங்கினேன்.
அந்த பணத்தில் சரும பராமரிப்புக்கு பயன்படும் 250 சோப்புகளை தயாரித்தேன். இதற்காக நான் நிறைய பரிசோதனைகள் செய்தேன். இதனால் என் மணிக்கட்டில் கொப்புளங்கள் கூட ஏற்பட்டன. நான் தயாரித்த அந்த சோப்புகளை எடுத்துக்கொண்டு எனது சொந்த ஊரான டெல்லிக்கு சென்றேன். அந்த சோப்புக்களை டெல்லியில் நடந்த கண்காட்சிகளில் வைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அதையே தொழிலாக மாற்ற முடிவு செய்தேன். எனவே இதற்காக ஆர்கானிகோ என்ற ஸ்டார்ட் ஆப் நிறுவனத்தை தொடங்கினேன்.
கழுதைப் பாலில் வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, அவை சருமம் உலராமல் பாதுகாக்கிறது. இது முகப்பருவை கட்டுப்படுத்துகிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இயற்கையாகவே சரும புதுப்பிப்புக்கு உதவுகிறது. சோப்புகளில், இது மென்மையான நுரையை உருவாக்குகிறது. இது உங்கள் முகத்தையும் உடலையும் மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.

இப்போது கையினால் தயாரிக்கப்படும் சோப்பு மற்றும் முகத்திற்கு போடப்படும் பசைகளை தயாரிக்கிறோம். எதிர்காலத்தில் சூர்ய வெளிச்சத்தில் இருந்து முகத்தை பாதுகாக்கும் கிரீம்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இப்போது எங்களது தயாரிப்புகள் ரூ.350லிருந்து ரூ.1400 வரை விற்பனையாகிறது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, டெல்லியில் இருந்து ஒவ்வொரு மாதம் 500 ஆர்டர்கள் எங்களுக்கு கிடைக்கிறது. கழுதைகள் வளர்க்கும் 150 குடும்பங்களின் வருமானம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து 14 ஆயிரமாக அதிகரிக்க உதவி இருக்கிறோம். கழுதைகளிடம் அதன் குட்டிகள் பால் குடிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நாள் விட்டு ஒருநாள் தான் பால் எடுக்கிறோம்” என்றார்.
பூஜாவுடன் இணைந்து செயல்படும் கழுதை வளர்க்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த சாஹித் என்ற கட்டுமான ஊழியர் இது குறித்து கூறுகையில், ”கட்டுமானப்பணி இல்லாத நாட்களில் வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். கழுதைப்பாலுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடையாது. 2019ம் ஆண்டு பூஜாவுடன் இணைந்த பிறகு ஒரு லிட்டர் கழுதைப்பால் ரூ.1300க்கு விற்பனை செய்கிறோம். முன்பு கழுதை பாலுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. இப்போது எங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவுகிறது” என்றார்.
