திருச்சி: “நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்த வேண்டும்” – மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களிலும், விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களிலும் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது.

பல்வேறு இடங்களில் நெல் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. 

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு

ஏற்கனவே, பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 1,825 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழையால் நெல் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் வைத்தனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனையடுத்து நெல் ஈரப்பதம் தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் ஆய்வு செய்ய குழு தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு

அதன்படி, மூன்று குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். அதில் ஒரு குழுவினர் செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும், மற்ற இரண்டு குழுக்கள் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.

அந்த வகையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று மத்திய உணவு பாதுகாப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.கே.ஷாகி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ராகுல் சர்மா மற்றும் தனீஜ் சர்மா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

அவர்களுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த தரக்கட்டுப்பாட்டு துறை மேலாளர் அய்யனார், கோவையைச் சேர்ந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் மணிகண்டன் ஆகியோரும், திருச்சி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் உடனிருந்தனர்.

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு

நெல்லின் ஈரப்பதம் தொடர்பாக ஆய்வு செய்து விவசாயிகளிடம் அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்தனர். அங்கிருந்த நெல் நிலையங்களில் இருந்து நெல் மாதிரிகளைச் சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

வாளாடி நெல் கொள்முதல் நிலையத்தில் எடுத்த மாதிரிகளை அங்குள்ள ஈரப்பதத்தைக் கண்டறியும் இயந்திரத்தில் வைத்து பார்த்த பொழுது அது 20.5 சதவீத ஈரப்பதத்தைக் காட்டியது.

மத்திய குழு ஆய்வு
மத்திய குழு ஆய்வு

இந்நிலையில், அந்தக் குழுவில் வந்த அதிகாரிகளிடம் அங்கிருந்த விவசாயிகள், “ஈரப்பத சதவீதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்யும் நாட்களையும் அதிகரித்து தர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

திருச்சி ஆய்வுக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்தக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.