தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 2-ம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விவாதங்கள்தான் அனலாகப் பறந்தன.
எதிர்கட்சித் தலைவர் அதிமுக எடப்பாடி பழனிசாமி,
-
கரூர் கூட்ட நெரிசலில் சென்ற ஆம்புலன்ஸ் வாகனங்களில் தி.மு.க ஸ்டிக்கர் வந்தது எப்படி?
-
நள்ளிரவு நேரத்தில் பிரேத பரிசோதனை வேகவேகமாக நடத்தி முடித்தது ஏன், என்ன அவசரம்?
-
கரூரில் விஜய் பிரச்சாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறை, உளவுத்துறை அரசுக்கு தகவல் கொடுக்கவில்லையா?
-
விஜய் கரூருக்கு முன்னதாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்திருக்கிறார். கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது?
உள்ளிட்ட கேள்விகளை ஆளும் திமுக அரசை நோக்கி கேள்விகளை எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இறந்தவர்கள் குடும்பத்தாரின் மனநிலையை கருத்தில் கொண்டு மனிதநேய அடிப்படையில் விரைவாக உடற்கூராய்வுகளை நடத்தினோம்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின்னர் ஆட்சியர் அனுமதியுடனேயே நள்ளிரவில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
28-ந்தேதி நள்ளிரவு 1.45 மணி அளவில் கூடுதலாக மருத்துவர்கள் வரவழைகப்பட்டு மொத்த 25 மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்யும் பணிகள் தொடங்கின. 5 மேசைகளில் 14 மணி நேரமாக உடற்கூராய்வு நடைபெற்றது. 3-4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை நடந்தது என்பது தவறாக தகவல்.
உடற்கூராய்வு செய்யப்பட்ட நிகழ்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. உடற்கூராய்வில் சந்தேகம் கிளப்புவது ஏற்புடையதல்ல” என்று பதிலளித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “செப்.27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம்” என்று கூறியிருக்கிறார்.