‘ட்ரம்புக்கு நோபல் பரிசு’ – வைரலாகும் இத்தாலி பிரதமரின் ரியாக்‌ஷன் – என்ன நடந்தது| Viral Video

இஸ்ரேல் – காசா போரை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னெடுத்தார். அதன் அடிப்படையில், இருதரப்பின் ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.

எகிப்தில் உள்ள ஷர்ம் எல்-ஷேக் (Sharm El-Sheikh – அமைதி நகரம் The City of Peace என்ற புனைப்பெயரைக் கொண்ட) நகரத்தில் உச்சி மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரிஃப், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ட்ரம்ப், ஜியோர்ஜியா மெலோனி, ஷெஹ்பாஸ் ஷெரிஃப், கெய்ர் ஸ்டார்மர்
ட்ரம்ப், ஜியோர்ஜியா மெலோனி, ஷெஹ்பாஸ் ஷெரிஃப், கெய்ர் ஸ்டார்மர்

இந்த மாநாட்டில் உரையாற்றிய அதிபர் ட்ரம்ப், “நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? அன்று நீங்கள் என்னிடம் சொன்னதைச் சொல்லுங்கள்” என்று கூறி, பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பைப் பேச அழைத்தார்.

அதைத் தொடர்ந்து மேடையில் ஏறிய ஷெரீப், “அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமைதியின் மனிதர். இது சமகால வரலாற்றில் மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாகும்.

ஏனெனில் அதிபர் ட்ரம்பின் அயராத முயற்சிகள் மூலம் பெரும் அமைதி ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர்களை நிறுத்துவதிலும், காசாவில் போர்நிறுத்தத்தை அடைய உதவியதிலும் ட்ரம்பின் அசாதாரண பங்களிப்புகளுக்காக பாகிஸ்தான் அவரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது.

ட்ரம்ப் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளார். ட்ரம்ப் அமைதிப் பரிசுக்கான மிகவும் உண்மையான மற்றும் அற்புதமான தேர்வாளராக இருப்பார்” என உரையாற்றினார்.

இந்த உரையில் அதிபர் ட்ரம்ப் குறித்து பாகிஸ்தான் பிரதமர் பேசும்போது இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் ரியாக்‌ஷன் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த உரைக்குப் பிறகு அதிபர் ட்ரம்ப், “ஆஹா! நான் இதை எதிர்பார்க்கவில்லை. நான் சொல்ல வேறு எதுவும் இல்லை. அமைதிக்கான நோபல் பரிசு மிகவும் அழகானவருக்கு வழங்கப்பட்டது. மிக்க நன்றி” எனக் கூறிவிட்டுச் சென்றார்.