தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்குப் பகல் நேர, முன்பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட மெமு (Memu) சிறப்பு ரயில்களை இயக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், சிறியவர் முதல் பெரியவர் வரை புத்தாடைகள் அணிந்து, சுற்றத்தார்க்கு இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் வசிப்போர் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அப்பண்டிகையைக் கொண்டாட பலரும் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

இதேபோல், அரசுப் போக்குவரத்து கழக விரைவுப் பேருந்துகளிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விரைவாகத் தீர்ந்து போய் விடுவது வழக்கம். அதேவேளை, தனியார் ஆம்னி பேருந்து கட்டணமானது, எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டும், தீபாவளித் திருநாளையொட்டி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விமானக் கட்டணத்திற்கு இணையாக இந்தக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் குறைந்த செலவில் தீபாவளிக்குச் செல்ல முடியுமா என்ற ஏக்கத்தில் தவித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு, தீபாவளிப் பண்டிகைக்கு முன்பும், பின்பும், சிறப்பு மெமு இரயில்கள் மதுரை-சென்னை, சென்னை-மதுரை என இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்டது. இதற்குப் பயணிகள் மிகுந்த வரவேற்பை அளித்தனர்.

எனவே, இந்த ஆண்டும், தெற்கு ரயில்வே நிர்வாகமானது தீபாவளிப் பண்டிகைக்கு முன்பும், பின்பும் ஒரு வார காலத்திற்கு முன்பதிவற்ற சேர் கார் வசதி கொண்ட மெமு சிறப்பு ரயில்களை பகல் நேரத்தில், சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நெல்லை, ராமேஸ்வரம், செங்கோட்டை, தென்காசி, சிவகாசி, விருதுநகர், இராஜபாளையம் மார்க்கமாக பகல் நேர சேர் கார் வசதி கொண்ட மெமு ரயில்களை இயக்கி வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
அதே போல், கோவை, திருப்பூர், பழனி ஆகிய பகுதியில் தென் மாவட்ட மக்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். எனவே, அங்கிருந்து, செங்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு பகல் நேர சேர் கார் வசதி கொண்ட மெமு ரயில்களை இயக்கினால் சொந்த ஊருக்குச் சென்று வர வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.
எனவே, தீபாவளிப் பண்டிகைக்கு இரு நாட்களுக்கு முன்பும், பின்னரும் பகல் நேர முன் பதிவில்லாத சேர் கார் வசதி கொண்ட மெமு ரயில்களை இயக்கிட வேண்டுமென ரயில் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.