தவெக: “கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்” – விஜய் விளக்கம்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள், காணொலிகள் வெளியாகி வருகின்றன. இதில் உண்மை எது, வதந்தி எது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கரூர், விஜய்
கரூர், விஜய்

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரித்திருந்த தவெக விஜய், இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய் பேசியவை இங்கே

என் வாழ்க்கையில இப்படியொரு வலிமிகுந்த விஷியத்தை நான் எதிர்கொண்டதில்லை. மனசு முழுக்க வலி, வலி மட்டும்தான். இந்தச் சுற்றுப் பயணத்துல மக்கள் என்ன பார்க்க வர்றாங்க, அதுக்கு ஒரே ஒரு காரணம், அவங்க என் மேல வச்சிருக்க அன்பும், பாசமும்தான். அதுக்கு நான் எப்பவும் கடமைப்பட்டிருக்கிறேன். அதனால் சுற்றுப்பயணத்துல எனக்காக வருகிற மக்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கணும் என்கிற எண்ணம் என் மனசுல எப்பவும் இருக்கும்.

மக்களோட பாதுக்காப்ப மனசுல வச்சுக்கிட்டுதான் அதுக்கான சரியான இடத்த தேர்வு பண்றது, காவல்துறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது பத்தி கேட்போம். ஆனால், இப்போது நடக்கக்கூடாத சம்பவம் நடந்திருச்சு. நானும் மனுசந்தான், இப்படிச் சம்பவம் நடந்த பிறகு அந்த ஊரவிட்டுவர எனக்கும் மனசில்லதான். ஒருவேளை நான் அங்கப் போனால், அதைக் காரணம் காட்டி, வேற எதாவது பதட்டமான சூழல், அசாம்பவிதம் நடந்திரும்னுதான் நான் அங்க போகிறத தவிர்த்துவிட்டேன்.

தவெக தலைவர் விஜய்
விஜய்

கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன்.

குடும்பங்களை இழந்து தவிக்கும், பாதிக்கப்பட்ட எல்லோரும் வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறேன். சிகிச்சை பெற்றுவருபவர்கள் பூர்ணகுணமாகி திரும்ப வரணும்னு பிரார்த்திக்கிறேன். கூடிய சீக்கிரமே உங்க எல்லாரையும் நான் சந்திக்கிறேன். இந்த நேரத்துல எங்களோட வலியைப் புரிஞ்சிக்கிட்டு பேசிய அரசியல் தலைவர்கள், மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்.

கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்குப் பிரசாரத்துக்குப் போனோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கல. ஆனால், கரூர் மாவட்டத்துல மட்டும் ஏன் இப்படி நடந்துச்சு?

மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும், மக்கள் எல்லாத்தையும் பார்த்துகிட்டு இருக்காங்க. கரூர் மக்களே அந்த உண்மையெல்லாம் சொல்லும்போது, அந்தக் கடவுளே இறங்கிவந்து அந்த உண்மையெல்லாம் சொல்ல வைக்கிறமாதிரி இருந்துச்சு. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளிய வரும்.

எங்களுக்குத் தரப்பட்ட இடத்துல நாங்க பேசிட்டு வந்தோம். அதைத்தாண்டி நாங்க எந்தத் தவறும் செய்யவில்லை. அப்படியிருந்தாலும் எங்க கட்சி தோழர்கள் மீது FIR போடுகிறார்கள், கைது செய்கிறார்கள். சோஷியல் மீடியாவுல போஸ்ட் போடுகிற எங்கள் தோழர்கள் மீதெல்லாம் FIR போடுகிறார்கள்.

CM சார் உங்களுக்கு எதாவது பழி வாங்கணும்னு எண்ணம் இருந்தா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுங்க, அவங்க மேல கை வைக்காதீங்க. நான் ஒண்ணு வீட்ல, இல்ல ஆபிஸ்ல இருப்பேன். நண்பர்களே, தோழர்களே நம்ம அரசியல் பயணம் இன்னும் உறுதியாகத் தொடரும்” என்று பேசியிருக்கிறார்.