கரூர் பெருந்துயரம்: “யாரும் இதை விரும்ப மாட்டார்கள்; வதந்திகளை பரப்ப வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலின்

கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை சமர்பிக்க அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள், வைரல் காணொலிகள் என களேபரமாகியிருக்கின்றன. இதில் உண்மை எது, வதந்தி எது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

கரூர் விஜய் பிரசாரம்

இந்நிலையில் இந்தச் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நிறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கரூரில் நடந்தது பெருந்துயரம், இனி நடக்கக்கூடாத துயரம். செய்தியறிந்து எல்லா உத்தரவுகளை பிறப்பிச்சுவிட்டும்கூட என்னால வீட்ல இருக்க முடியல. அன்னைக்கு இரவே கரூருக்குப் போனேன். மருத்துவமனையில் நான் பார்த்த காட்சிகள் எல்லாம் இன்னும் மனதைவிட்டு நீங்கவில்லை.

அந்த பாதிப்பு அப்படியே இருக்கு. உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு சிகிச்சை வழங்கி வருகிறோம். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்திருக்கிறோம். அதன் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து அவதூறுகளையும் – வதந்திகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எந்தவொரு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது தொண்டர்கள், அப்பாவி மக்கள் இறப்பதை எப்போதும் விரும்ப மாட்டார்கள். உயிரிழந்தவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், எல்லோரும் நம்முடைய தமிழ் உறவுகள்தான். சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த சமயத்தில் பொறுப்பற்ற முறையில் பரப்பப்படும் விஷமத்தனமான வதந்திகளை தவிர்க்கனும்னு கேட்டுக்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது எத்தகைய பொறுப்போடு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய கடமை.

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழுவின் முழுமையான அறிக்கைக்குப் பிறகு பொதுக்கூட்டங்கள் நடத்துவதில் என்னனென்ன விதிகள். நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

எல்லாத்தையும் விட மானுடப் பற்றுதான் உயர்ந்தது. அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் எல்லாத்தையும் விலக்கி வைத்துவிட்டு எல்லாரும் மக்களின் நலனுக்காக சிந்திக்கனும்னு கேட்டுக்கிறேன். தமிழ்நாடு எல்லாவற்றிருக்கும் முன்னோடியாக முன்னேறி வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனி எந்தக் காலத்திலும் நடக்காத வகையில் பொறுப்போடு நடந்துகொள்வது நம் எல்லோருடைய கடமை”