Vice President Election: தமிழகத்திலிருந்து 3-வது துணை ஜனாதிபதி; வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணன்!

துணை குடியரசு தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ஆம் தேதி உடல் நலக்குறைவை காரணம் காட்டி பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று(செப்.9) நடந்தது.

சுதர்சன் ரெட்டி - சி.பி.ராதாகிருஷ்ணன்
சுதர்சன் ரெட்டி – சி.பி.ராதாகிருஷ்ணன்

17வது துணை குடியரசு தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மகாராஷ்டிராவின் ஆளுநரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.சுதர்சன் ரெட்டியும் போட்டியிட்டனர்.

இந்தத் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்றது. இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொத்தமுள்ள 781 வாக்குகளில் வெற்றிபெற தேவையான 391 வாக்குகளை விட 61 வாக்குகள் கூடுதலாகப் பெற்று 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றிருக்கிறார்.

இதன் மூலம் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகத்திலிருந்து மூன்றாவது துணைக் குடியரசுத் தலைவராகியிருக்கிறார்.

தொடர்ந்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், செப்டம்பர் 12-ம் தேதி அவர் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகின்றன.

மறுபக்கம், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார்.

சுதர்சன் ரெட்டிக்கு 315 பேர் வாக்களித்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் ட்வீட் செய்திருந்த நிலையில், மொத்தம் பதிவான வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார்.