திண்டுக்கல் சட்ட விரோத குவாரிகள்: “அதிகாரிகளின் கூட்டுச் சதியா?” – உயர்நீதிமன்றம் கேள்வி

குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது என்று, சட்டவிரோதக் குவாரிகள் மீதான வழக்கு விசாரணையில் தெரிவிக்கப்பட்ட தகவலால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், “திண்டுக்கல் மாவட்டத்தில் மணல் குவாரிகள் செயல்பட மாவட்ட நிர்வாகம் எந்த ஒரு அனுமதியும் வழங்கவில்லை.

ஆனால் பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக ஆற்று மணல், கிராவல் மணல் தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அள்ளப்பட்டு வருகிறது.

இதனால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. மேலும், அரசிடம் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடுவதால் அரசிற்குப் பெரும் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஏராளமான சட்டவிரோதக் குவாரிகளை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக திடீர் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதோடு, சட்டவிரோத மணல் குவாரிகளை மூடி சம்பந்தப்பட்ட நபர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்

இந்த வழக்கைக் கடந்த வாரம் விசாரணை செய்த நீதிபதிகள், “சட்டவிரோத குவாரிகளை உடனடியாக மூடி சீல் வைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், குவாரி நடத்தியவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும், கனிம வளம் நமது நாட்டின் சொத்து, அதை ஒருபோதும் திருடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அதிகாரிகள் அதற்கு துணை போகக் கூடாது” எனக் கடும் எச்சரிக்கை செய்திருந்தனர்.

குவாரி (ஃபைல் படம்)

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம்-மரிய கிளாட் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில், “சம்பந்தப்பட்ட குவாரிகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டவிரோத குவாரியின் முன் பக்க கதவுகள் சீல் வைக்கப்பட்டு, பின்பக்கமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்து, அதற்கான புகைப்படங்களை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

அப்போது கோபமடைந்த நீதிபதிகள், “இதுபோன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா? அல்லது வேறுவிதமாக நடக்கின்றதா?” எனக் கேள்வி எழுப்பியவர்கள், “அதிகாரிகளின் இவ்வாறான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தக் குற்றச்சாட்டுகள் கடுமையானவை என்பதால், வரும் 16.07.2025 அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் இந்த நீதிமன்றத்தில் காலை 10.30 மணிக்கு ஆஜராகி, உண்மைகளை விளக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY