“2ஜி வழக்கில் எந்த சிபிஐ வழக்குப் பதிந்ததோ அதே சிபிஐ-யை தண்ணீர் குடிக்க வைத்தேன்” – ஆ.ராசா பேச்சு

புதுக்கோட்டையில் கலைஞர் தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

ஆ.ராசா
ஆ.ராசா

அப்போது, பேசிய அவர், “இந்த மேடையில் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகம் வந்துள்ளனர். அரசியல் மேடையைப் பார்த்தால் அதற்கேற்ப பெருமையும், சிறுமையும் உண்டு.

துன்பம் உண்டு, துயரம் உண்டு. 2 ஜி வழக்கில் சிறைக்கே போய்விட்டு வந்தவன். உச்சத்தைத் தொட்டவன். அதற்குப் பிறகு மீண்டு வந்து எந்த சி.பி.ஐ. என் மீது வழக்குப் போட்டதோ அந்த சி.பி.ஐ-யைத் தண்ணீர் குடிக்க வைத்தவன்.

எல்லாம் இருந்தாலும் கூட அரசியலிலும் ஏறுதலும், இறங்குதலுமாக இருக்கும். ஆனால், இந்த மேடையில் மாணவர்களைப் பார்க்கும் போது என்னுடைய இளமைக் காலம் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

தி.மு.க-வுக்கு மாற்று வேண்டும் எனக் கூறி வருகின்றனர். திராவிட கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்கின்றனர். நடிகர் எல்லாம் வந்துவிட்டார். திராவிட இயக்கங்களுக்கு கலைஞர் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக கை ரிக்‌ஷா வைத்திருப்பவர்களுக்குச் சைக்கிள் ரிக்‌ஷா வழங்கியவர் கலைஞர். அவரது ஆட்சியில் செயல்படுத்திய எண்ணற்ற திட்டங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெண்களுக்குச் சொத்தில் உரிமைச் சட்டம் கொண்டு வந்தவர் கலைஞர்.

உள்ளாட்சியில் முதலில் பெண்களுக்கு 33 சதவிகிதம் கொண்டு வந்தார். தற்போது, 50 சதவிகிதமாக உள்ளது. பெண்கள் சைக்கிள் ஓட்டுவதற்கே அந்தக் காலத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இன்று விமானத்தில் பைலட்டே பெண்கள் பலர் இருக்கின்றனர்.

இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தது எது, திராவிட இயக்கம். நாங்கள் ஆன்மிகத்திற்கு எதிரி கிடையாது. நம்முடைய தாய் மொழி தமிழுக்குச் செம்மொழி என்ற அந்தஸ்தைப் பெற்றுத் தந்தவர் கலைஞர்.

நாடாளுமன்றத்தில் எதையெல்லாம் வேணும் என்று தீர்மானம் போடுவதை நாங்கள் சட்டசபையில் வேண்டாம் என்று தீர்மானம் போடுகிறோம்.

ஆ.ராசா
ஆ.ராசா

நாங்கள் டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த துணிச்சல், இறுமாப்பு எங்கிருந்து வருகிறது என்றால் திராவிட சித்தாந்தம், பெரியார், அண்ணா கொள்கைகளைக் கடைப்பிடிப்பதால், எங்கள் மொழியை, இனத்தை நேசிப்பதால் உங்களை நாங்கள் மதிப்பதே இல்லை.

உங்கள் சமஸ்கிருத தத்துவம் பிடிக்கவில்லை. தனித்த அடையாளத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காகத் திராவிட சித்தாந்தம். இந்தச் சித்தாந்தத்தை உலகம் முழுவதிற்கும் இன்று பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேரின் மொத்த வடிவமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY