“நாங்கள் நீதிமன்றம் செல்வோம் என ஆளுநர் பயந்திருக்கலாம்” – மசோதா ஒப்புதல் குறித்து ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்றது.

அதில், உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவம் வகையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகிய இரண்டு சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் வகையில் மசோதாக்களை முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மசோதாவில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியின்றி குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமனம் செய்யப்படுவர்.

ஆளுநர் ரவி - ஸ்டாலின்
ஆளுநர் ரவி – ஸ்டாலின்

இந்த திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறிருக்க, தமிழக அரசு அனுப்பிய இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (ஜூன் 3) ஒப்புதல் அளித்திருக்கிறார்.

இதன் மூலம், மாற்றுத்திறனாளிகள் சுமார் 650 பேர் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 பேர் கிராம பஞ்சாயத்துக்களிலும், 388 பேர் ஊராட்சி ஒன்றியங்களிலும், 37 பேர் மாவட்ட ஊராட்சிகளிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் உருவப்படத்துக்கு அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஸ்டாலினிடம், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.

அதற்கு ஸ்டாலின், “அதை நாங்கள் எதிர்பார்த்ததுதான். ஒருவேளை, நீதிமன்றத்துக்கு நாங்கள் செல்வோம் என்று பயந்து அவர் ஒப்புதல் அளித்திருக்கலாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.