Gaza: “உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது” -இஸ்ரேலை எதிர்த்து காசாவுக்கு உதவ முயலும் கிரேட்டா தன்பெர்க்

ஸ்வீடனைச் சேர்ந்த காலநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், இஸ்ரேலின் கட்டுப்பாடுகளை உடைத்து காசாவுக்கு கப்பலில் நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்கிறார்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காசாவுக்கு நிவாரணப் பொருள்கள் செல்வது கிட்டத்தட்ட முற்றிலுமாக தடைபட்டுள்ளது. ஐநா கூறுவதன்படி, உலகிலேயே பசி நிறைந்த பகுதியாக காசா உள்ளது.

Greta Thunberg

இந்த நிலையில் ஃப்ரீடம் ஃப்ளோட்டிலா கூட்டணி (FFC) என்ற இயக்கம் இந்த பயணத்தை ஏற்பாடு செய்துள்ளது. கப்பலில் செல்பவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையைக் கடந்து காசா மக்களுக்கு உதவிப்பொருள்களைக் கொண்டு சேர்க்கும் பெரும் சவாலை ஏற்றுள்ளனர்.

“உலகின் மௌனம் அச்சுறுத்துகிறது”

இந்த செயல்திட்டம் குறித்துப் பேசிய கிரேட்டா தன்பெர்க், “இந்த விவகாரத்தில் உலகம் வெறும் பார்வையாளர்களாக நிற்க முடியாது. உலகம் இதை எளிதாக கடந்து செல்வதும், மௌனமாக இருப்பதும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. 20 லட்சம் மக்கள் அமைப்பு ரீதியாக பட்டினியாக்கப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாலஸ்தீன் சுதந்திரத்துக்காக நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டியது நமது தார்மீகக் கடமை.” எனக் கூறியுள்ளார்.

Madleen
Madleen

உலக சுகாதார நிறுவனம், காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடுவதாக சுட்டிக்காட்டியிருக்கிறது. அங்கிருக்கும் 75% மக்கள் தீவிரமான உணவுத் தேவையை சந்தித்துள்ளனர்.

நிவாரண கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்!

இதற்கு முன்னரும் கடல்வழியாக உதவிப்பொருள்களை அனுப்ப முயற்சி செய்துள்ளது FFC இயக்கம். கடந்த மே 2-ம் தேதி நிவாரணப்பொருள்கள் எடுத்துச் சென்ற கப்பல் மால்டா அருகே ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. கப்பலில் இருந்த செயற்பாட்டாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமே காரணம் எனக் குற்றம்சாட்டினர். ஆனால் இஸ்ரேல் தரப்பில் மறுத்துள்ளனர்.

இந்த முறை செல்லும் Madleen கப்பலில் கிரேட்டா தன்பெர்க் உடன் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் தொடர் நடிகர் லியாம் கன்னிங்ஹம், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் செல்கின்றனர்.

Gaza-ல் போர் நிறுத்தம் வருமா?

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போரை நிறுத்த சர்வதேச பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைக்கு அமெரிக்கா முன்மொழியும் 60 நாள் போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகளை விடுவித்தல் உள்ளிட்ட கூறுகள் அடங்கிய ஒப்பந்தத்தை ஹமாஸ் பரிசீலித்து வருகிறது.