டெல்லி: வகுப்பறையில் சாணம் பூசிய கல்லூரி முதல்வர்; பதிலுக்கு மாணவர் சங்க தலைவர் செய்த செயல்!

டெல்லியில் உள்ள லக்‌ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வர் வகுப்பறையில் மாட்டு சாணம் பூசிய வீடியோ வைரலானது.

அவரது செயலுக்கு டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ரோனக் காத்ரி எதிர்வினை ஆற்றியுள்ளது முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது.

கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலாவின் அறையில், அவர் மாணவர்களுக்குச் செய்ததுபோலவே சாணத்தைக் கொண்டு பூசியுள்ளார் ரோனக் காத்ரி.

லக்‌ஷ்மிபாய் கல்லூரி வகுப்பறையில் வெயிலின் தாக்கத்தைக் குறைப்பதாகக் கூறி சாணத்தால் பூசினார் கல்லூரி முதல்வர். இது குறித்து எதிர்ப்புகள் எழுந்ததும், நிலையான குளிரூட்டும் முறைகள் குறித்த கல்லூரி பேராசிரியர் தலைமையிலான ஆராய்ச்சியின் ஒரு பகுதி என விளக்கம் அளித்தார்.

இதைத் தொடந்து செவ்வாய் அன்று வெளியான வீடியோவில், ரோனக் காத்ரி மற்றும் மணவர் சங்க உறுப்பினர்கள் சிலர், கல்லூரி பணியாளர்களுடன் வாதிடுவதைப் பார்க்க முடிந்தது.

மாணவர்களின் விருப்பமில்லாமல் சாணத்தைப் பயன்படுத்தியதற்கு பொறுப்பேற்க வேண்டும் என மாணவர் சங்கத்தினர் கேட்டுக்கொண்டனர்.

மேலும் இது போன்ற அராய்ச்சிகளைச் செய்ய வேண்டும் என்றால் உங்கள் வீட்டில் செய்யுங்கள் என்றும் காத்ரி தெரிவித்தார். கல்லூரி முதல்வர் அறையில் சாணம் பூசிய சம்பவத்துக்குப் பிறகு எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்ட காத்ரி.

அந்த வீடியோவில், “நாங்கள் முதல்வர் அம்மாவுக்கு உதவி செய்திருக்கிறோம். அவர் அவரது அறையில் உள்ள ஏசியை கழற்றி மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, மாட்டுச் சாணம் தடவிய இந்த நவீன மற்றும் இயற்கையான குளிர்ச்சியான சூழலில் கல்லூரியை நடத்துவார் என நம்புகிறேன்” என்றுப் பேசியுள்ளார்.

ஏப்ரல் 13ம் தேதி ஞாயிறு அன்று தனது விளக்கத்தின் போது, இன்னும் ஒரு வாரத்தில் உள்நாட்டு மற்றும் நிலையான குளிர்விக்கும் முறைகள் பற்றிய ஆராய்ச்சியின் விவரங்களை வெளியிடுவதாக முதல்வர் பிரத்யுஷ் வத்சலா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா டுடே வலைதளம் கூறுவதன்படி, சாணம் பூசும் வீடியோவை ஆசிரியர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ள முதல்வர், “இங்கு வகுப்பு நடத்துபவர்கள் விரைவில் புதிய தோற்றத்தில் அறையைப் பெறுவர். உங்கள் கற்பித்தல் அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.