மண்ணை வணங்கிய விவசாயிகள்; களைகட்டிய தஞ்சை கிராமங்கள் – `நல் ஏர் பூட்டும் விழா’ குறித்து தெரியுமா?

மண்ணை நம்பிய விவசாயிகளின் வாழ்வை பண்டிகைகள்தான் வண்ணமயமாக்குகின்றன. வறட்சியோ விளைச்சலோ பொங்கலும் புத்தாண்டும் காவிரிப் படுகையைக் கொண்டாட்டக் களமாக்கிவிடும்.

முப்போக விளைச்சல் காணும் பூமியாயினும் ஆடிப்பட்டமும் சித்திரைப் பட்டமும் முக்கியமானது. சித்திரைப் பட்டம்தான் விவசாயத்தின் ஆரம்பம். சித்திரையில் நெல்லோ, உளுந்தோ, எள்ளோ விதை வீசினால் புரட்டாசி கடைசியில் அறுக்கலாம். தீபாவளி களைகட்டும். இந்தக் கோடை வேளாண்மையை தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் விவசாயிகள். அந்த விழாவுக்குப் பெயர் நல் ஏர் பூட்டுதல்.

வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் நல் ஏர் பூட்டும் விழா

விவசாயத்துக்கு ஆதாரமாக இருக்கும் மண்ணையும் ஏர் கலப்பையையும் வணங்கி, நன்றி தெரிவிக்கும் விழாவாக நல் ஏர் பூட்டும் விழா தஞ்சாவூரை சுற்றியுள்ள வேங்கராயன் குடிகாடு, ராயமுண்டான்பட்டி, செல்லப்பன்பேட்டை, ஆச்சாம்பட்டி, விண்ணமங்கலம், பருத்திக்குடி களிமேடு, பட்டுக்குடி, ராவுசாப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் கொண்டாடப் படுகிறது.

தமிழ் புத்தாண்டில், பெண்கள் வீடு, வாசல் கழுவி சுத்தம் செய்வார்கள். வீட்டுக் கதவுகள்ல சூரியனைக் குறிக்கிற மாதிரி மஞ்சள் தூளைக் குழைச்சு வட்டம் போடுவாங்க. ஆண்கள் ஏர் கலப்பையை சுத்தம் பண்ணி சந்தனம், குங்குமம் வைப்பாங்க. ஆடு மாடுகளைக் குளிப்பாட்டி மஞ்சள், குங்கும் பொட்டு வைத்து அலங்காரம் செய்வார்கள். இந்த விழாவோட சிறப்பே காப்பரிசி தான். வீட்டுக்கு வீடு செய்வார்கள்.

பச்சரிசியை ஊற வச்சி, தேங்காயை சின்னது சின்னதா வெட்டி அதுல போடுவாங்க. அதோட பொட்டுக்கடலை, ஏலக்காய் சேத்துக்குவாங்க. நாட்டு சர்க்கரையைப் பாகு காய்ச்சி அதுல சேர்த்து நல்லாக் கிளறினால் காப்பரிசி ரெடி. பின்னர் மாடு, ஏர் கலப்பையை எடுத்துக்கிட்டு குடும்பத்தோட வயக்காட்டுக்குப் போயிடுவாங்க. வயக்காட்டுல ஈசானி மூளையில் ஒரு அடி உயரம், ஓரடி அகலத்தில மண்ணைக் குவிச்சு மேடாக்குவாங்க. அதுல சாணத்தில பிள்ளையார் பிடிச்சு பூ, பொட்டு வச்சு அலங்கரிப்பாங்க. வாழை இலை போட்டு காப்பரிசி, பழங்களைப் படைப்பாங்க. சாமி கும்பிட்டு முடிச்சதும் நல்ல நேரம் பார்த்து ஏர் கலப்பையில மாட்டைப் பூட்டி கற்பூரம் காமிச்சு உழவு ஓட்டுவாங்க.

தமிழ் புத்தாண்ட் நல் ஏர் பூட்டும் விழா

உழுது முடிஞ்ச பிறகு நெல்லோ, கடலையோ நவதானியமோ ஏதோ ஒரு பயிரோட விதையை விதைப்பாங்க. இறுதியா எல்லாருக்கும் காப்பரிசி, பழங்களை பிரசாதமாக் கொடுப்பார்கள். இது தான் நல் ஏர் பூட்டும் விழா.

பொங்கல் பண்டிகைக்கு இணையாக காலம் காலமாக இந்த விழாவும் மரபு மாறாமல் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டான நேற்று வழக்கம் போல் பல கிராமங்களில் நல் ஏர் பூட்டும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. வேங்கராயன் குடிகாடு கிராமத்தில் கொல்லைக்கு குடும்பத்துடன் சென்ற விவசாயிகள் மணுக்கும், சூரியனுக்கும் மரியாதை செய்கின்ற விதமாக காப்பரி, பழங்கள் வைத்து படையலிட்டு நல் ஏர் பூட்டினார்கள். இயற்கை செழிக்கவும், தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கவும், வெள்ளாமை அமோகமாக இருக்கவும், எல்லாம் நன்மையாக அமையவும் வேண்டிக் கொண்டனர்.

இதே போல் கணபதி அக்ரஹாரம் அருகே உள்ள பட்டுக்குடி, ராவுசாப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் தமிழ்புத்தாண்டு நல் ஏர் பூட்டும் விழாவை கொண்டாடினார்கள். ராவுசாப்பட்டியில் 15க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஏர் ஓட்டி, விதை நெல் தெளித்து சித்திரை பட்டத்துக்கான விவசாய பணியை தொடங்கினர்.

தற்போதைய காலக்கட்டத்தில் வேளாண்மைக்கு இயந்திரங்கள் பயன்படுத்துவது அதிகரித்து விட்டன. உழவு மாடு, ஏர் கலப்பை கொண்டு விவசாய பணிகளில் ஈடுபடுவது குறைந்து விட்டது. உழவு மாடு, ஏர் கலப்பை இல்லாத விவசாயிகள் டிராக்டர் உள்ளிட்ட இயந்திரங்களை கொண்டு நல் ஏர் விழாவை கொண்டாடுவதாக தெரிவித்தனர்.!