மும்பை விமான நிலையம்: தனிநபர் விமானங்களை காலி செய்ய அதானி நிறுவனம் நோட்டீஸ்

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், ஏராளனான தொழிலதிபர்கள் தங்களது விமானத்தை நிறுத்தி வைத்துள்ளனர். அதற்கு வருடாந்திர அடிப்படையில் வாடகை செலுத்தப்படுவது வழக்கம்.

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் இப்போது இரண்டாவது விமானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அந்த விமானம் நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது. இதையடுத்து மும்பை விமான நிலையத்தில் இருக்கும் தனி நபர்கள், வி.ஐ.பி.க்கள், தொழிலதிபர்களின் விமானங்களை புதிதாக திறக்கப்பட இருக்கும் விமான நிலையத்திற்கு மாற்ற மும்பை விமான நிலையத்தை இயக்கி வரும் அதானி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நவிமும்பை விமான நிலையத்தையும் அதானி நிறுவனம்தான் கட்டி வருகிறது. இந்நிலையில் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் விமானங்களை அங்கிருந்து ஜூலை 31ம் தேதிக்குள் காலி செய்யும்படி கூறி அதானி நிறுவனம் சம்பந்தப்பட்ட விமானங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அவ்வாறு சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து காலி செய்யப்படும் விமானங்களை புதிய விமான நிலையத்தில் நிறுத்தும்படி அதானி நிறுவனம் கேட்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்த ஒரு நேரம் செலுத்தக்கூடிய கட்டணமாக ரூ.20 கோடியும், வருடாந்திர வாடகை கட்டணமும் வசூலிக்க அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதானி நிறுவனத்தின் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், கட்டண ஒழுங்கு முறை ஆணையம் தான் கட்டணத்தை நிர்ணயம் செய்யவேண்டும் என்று விமான உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தனி நபர்களுக்கு விமானங்களை வாடகைக்கு விடும் தனியார் நிறுவனங்களும் அதானி நிறுவனத்தின் இம்முடிவு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

விமான நிலையம்
விமான நிலையம்

மேலும் பெரும்பாலான தங்களது வாடிக்கையாளர்கள் மும்பையில் இருந்து விமானத்தில் செல்வதையே விரும்புகின்றனர் என்றும், அவர்களை மும்பையில் இறக்கிவிட்டுவிட்டு மீண்டும் நவிமும்பை விமான நிலையம் செல்லும்போது அதற்கு கூடுதல் எரிபொருள் செலவாகிறது என்று தனியார் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் விமான நிலையத்தில் கட்டுமானப்பணி நடக்க இருப்பதால்தான் தனியார் மற்றும் தனிநபர்களின் விமானங்களை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து காலி செய்யச்சொல்கிறோம் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் விமான பார்க்கிங் எண்ணிக்கை அளவை அதிகரிக்கவேண்டும் என்று விமான பொருளாதார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு தனியார் விமானங்களின் உரிமையாளர்கள் கடிதம் எழுதி இருக்கின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel