தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உயர் சிகிச்சைக்காக முருகனை அவரது குடும்பத்தார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வெள்ளிக்கிழமை அதிகாலை அழைத்துச் சென்றனர். பல்லடம் அருகே பெரும்பாளி என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருந்தபோது அதிகாலை 4 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சிகிச்சைக்காக சென்ற முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஆம்புலன்ஸில் பயணித்த முருகனின் மனைவி கல்யாணி, மகள் கவிதா மற்றும் ஆம்புலன்ஸை ஓட்டி வந்த ஓட்டுநர் கவியரசன் மற்றும் விஜய் ஆகிய நான்கு பேரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு பேருக்கும் அரசு மருத்துவமனையில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் முருகன் மனைவி கல்யாணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், ஆம்புலன்சை ஓட்டி வந்த கவியரசன் என்பவருக்கு இரண்டு கால்களும் முறிந்த நிலையிலும் மற்றும் உடன் வந்த விஜய்க்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் இரண்டு பேரையும் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக சென்றவர்கள் உயிரிழந்தது திருப்பூர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.