சமீபத்திய நேர்காணலில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “எனக்கு இந்தியாவுடன் மிக நல்ல உறவு உள்ளது. ஆனால்…” என்று இந்தியா மற்றும் பிரதமர் மோடி குறித்தான கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
கடந்த மாதம் அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்பைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து ட்ரம்பிடம் நேர்காணலில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘இந்தியாவிற்கும், எனக்கும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால், உலக நாடுகளில் அமெரிக்காவிற்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் எனக்கு, அவர்களுடனான ‘ஒரே பிரச்னை’. அவர்கள் அந்த வரிகளை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால், வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், அவர்கள் நம் மீது எவ்வளவு வரி விதிக்கிறார்களோ, அதே அளவிலான வரி அவர்கள் மீதும் விதிக்கப்படும்.

இந்தியா மத்திய கிழக்கு ஐரோப்பிய பொருளாதார காரிடார் (IMEC) என்பது அற்புதமான நாடுகளின் குழு ஆகும். இது எந்த நாடு நம் மீது அதிக வரி விதிக்கிறதோ, அவர்களுக்கு எதிராக செயல்படும். உலக அளவில் சக்திவாய்ந்த வணிகக் குழு கூட்டாளிகள் நம்மிடம் உள்ளார்கள்.
அதற்காக, அந்தக் குழுவினர் நம் மீது அதிக வரிகள் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமக்கு எதிரியாக இருப்பவர்கள்கூட சில விஷயங்களில் நம்மை நன்கு நடத்துகிறார்கள். ஆனால், நண்பர்கள் போல இருப்பவர்கள், உதாரணத்திற்கு ஐரோப்பியன் ஒன்றியம் போன்றவை வணிகத்தில் நம்மை சரியாக நடத்துவதில்லை” என்று பேசியுள்ளார்.