அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றிருக்கும் நிலையில், அவருக்கு அடுத்து கவனம் பெற்றவர் துணை அதிபராகப் பதவியேற்ற ஜேடி வான்ஸ். இவர் தென்னிந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா சிலுகுரி என்பவரை கடந்த 2014-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். டிசியில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் உஷா சிலுகுரி வான்ஸ், ஜேடி வான்ஸ் அமெரிக்கத் துணை அதிபராக பதவியேற்கும் நிகழ்வில், தன் கணவரை பெருமையுடன் பார்த்து மகிழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஆந்திராவின் விஜயநகரத்தில் உள்ள செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராகத் தொடர்ந்து பணியாற்றி வரும் உஷா சிலுகுரி வான்ஸின் பாட்டி பேராசிரியர் சாந்தம்மா சிலுகுரி தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருந்தார். அதில், “இந்த தருணத்தை இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையிலான உறவின், ஒத்துழைப்பின் பாலமாக கருதுகிறேன். இந்த தம்பதி இந்தியாவின் சில பிரச்னைகளைத் தீர்ப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் ஜே.டி.வான்ஸையும், என் பேத்தி உஷாவையும் வாழ்த்துகிறேன். உங்கள் நாட்டையும் (அமெரிக்காவையும்) என்னுடைய நாட்டையும் (இந்தியாவையும்) கடவுள் ஆசீர்வதிக்கட்டும். சிலுகுரி குடும்பத்திற்கு இது ஒரு பெருமையான தருணம். எனது கணவர் சுப்பிரமணிய சாஸ்திரி, அவரது மூத்த சகோதரர் ராம சாஸ்திரி பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகப் பணியாற்றினர். சமூக அக்கறையை மிகவும் மதிக்கும் குடும்பம் எங்களுடையது.







என் கணவர் அவசரநிலை காலத்தில் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரின் சிந்தனைதான் உஷாவுக்கும் இருக்கும். எனவே, நமது நாட்டின் கௌரவத்தை மேலும் உயர்த்துவதற்கான வாய்ப்பு இந்த முறை உஷாவுடையது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.