Tiktok: 14 மணி நேரத்தில் தடையை நீக்கிய டிரம்ப்; நன்றி தெரிவித்த டிக் டாக்..!

‘அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது’ என்று ஆரம்பித்து ‘மக்களின் தகவல்களை திருடுகிறார்கள்’ என்பது வரை சென்று அமெரிக்காவில் டிக் டாக் ஆப்பிற்கு தடை கொண்டுவரப்பட்டது.

இது 170 மில்லியன் அமெரிக்க டிக் டாக் பயனாளர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. இந்த நிலையில், நேற்று செயல்பாட்டிற்கு வந்த டிக் டாக் தடை வெறும் பதினான்கே மணிநேரத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

‘டிரம்பிற்கு நன்றி!’

இதுகுறித்து நேற்று டிரம்ப் கூறுகையில், “நான் அதிபராக நாளை பதவியேற்றதும் இந்தத் தடை செயல்பாட்டிற்கு வரும் நேரத்தை தள்ளிப்போடும் ஒப்பந்தத்தில் கையெழுத்துவிடுவேன். இதனால், டிக் டாக் எந்தவொரு தடையும் இல்லாமல், மீண்டும், அமெரிக்காவில் செயல்படலாம்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, டிக் டாக்கை அமெரிக்க ப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கியிருந்த ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. டிக் டாக் நிறுவனம் மீண்டும் டிக் டாக்கை அமெரிக்காவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளது. இதற்காக, டிக் டாக் நிறுவனம் ‘டிரம்பிற்கு நன்றி’ தெரிவித்துள்ளது.