TVK : ‘பெர்சனல் மீட்டிங்… அலப்பறை கொடுத்த பெண் நிர்வாகி’ – விஜய் கட்சி மீட்டிங் ஹைலைட்ஸ்

விஜய்யின் த.வெ.க கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுக்கான முக்கிய கூட்டம் அக்கட்சியின் தலைமையகம் அமைந்துள்ள பனையூரில் நடந்து வருகிறது. கட்சிக்கான மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக சில முக்கியமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகளுடனான ஆனந்த்தின் பெர்சனல் மீட்டிங், அதிருப்தியாளர்களின் அலப்பறை என இந்த கூட்டத்தின் முக்கியமான ஹைலைட்ஸ் இங்கே.

தவெக

கட்சிக்கென புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம் எனக் கூறி முக்கிய நிர்வாகிகளுக்கு நேற்று காலை தலைமையகத்திலிருந்து அழைப்பு சென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்தே தமிழகம் முழுவதுமிருந்து முக்கிய நிர்வாகிகள் இன்று காலை பனையூர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்தனர். திடீர் மீட்டிங், நிர்வாகிகள் நியமனம் தொடர்பான ஆலோசனை என்பதால் கட்சியின் தலைவரான விஜய் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார் என நிர்வாகிகள் ஆர்வமாக எதிர்பார்த்திருந்தனர். ஆனால், 10:30 மணிக்கு தலைமையகத்தை அடைந்த கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், ‘தலைவர் கூட்டத்திற்கு வரவில்லை. நிர்வாகிகளுடன் கட்சியின் மேம்பாடு சம்பந்தமாக மட்டுமே பேசப்போகிறோம்.’ என செய்தி சொன்னார்.

10:30 மணிக்கு அத்தனை நிர்வாகிகளும் மீட்டிங் நடக்கும் இடத்தில் அசம்பிள் ஆகியிருந்தனர். ஒரு சில முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக பேசிய ஆனந்த், 11:30 மணிக்கு மேல் ஒரு லிஸ்ட்டை கொடுத்து அந்த லிஸ்ட்டில் பெயர் இருக்கும் நிர்வாகிகளை மட்டும் மீட்டிங்கில் இருக்குமாறு அறிவுறுத்தினார். மாவட்டத் தலைவர்கள், மகளிரணி தலைவர்கள் மற்றும் சில முக்கிய அணிகளின் தலைவர்களை மட்டும் உள்ளே இருக்க அனுமதித்தனர். ‘4 மணிக்கு மேல் உங்களையெல்லாம் ஆனந்த அண்ணன் சந்திப்பார்..’ எனச் சொல்லி மற்ற நிர்வாகிகளையெல்லாம் அலுவலகத்துக்கு வெளியே காத்திருக்க அறிவுறுத்தினர்.

ஆனந்த்

கட்சிக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்படும் முன்பே சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் ஆரம்பமாகியிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் அஜிதா ஆக்னஸ் இந்த நிர்வாகிகள் கூட்டத்துக்கே மாநாடு போல டூரிஸ்ட் பஸ்ஸில் தொண்டர்களை அழைத்து வந்து அலப்பறையோடு கட்சி அலுவலகத்துக்குள் சென்றிருந்தார். ஆனந்த் கொடுத்த லிஸ்ட்டில் பெயர் இல்லை என்பதால் 12:30 மணியளவில் அதிருப்தியோடு அஜிதா ஆக்னஸ் வெளியே வந்தார்.

ஊடகங்களுக்கு செய்தி தெரிந்துவிட்டதால் அவர் முன்னே மைக்கை நீட்ட, ‘4 மணிக்கு மேல வர சொல்லியிருக்காங்க…’ என மழுப்பலாக பதிலை சொல்லிவிட்டு, தான் கூட்டி வந்திருந்த கூட்டத்தோடு பேரணியாக காரில் ஏறி சென்றார். தூத்துக்குடியை சேர்ந்த பில்லா ஜெகன் விஜய் ரசிகர். திமுக ஆதரவாளர். விஜய் கட்சி தொடங்கிய பிறகும் திமுகவில் அனிதா ராதாகிருஷ்ணனுடன் நெருக்கம் காட்டியதால் த.வெ.க விலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரின் தங்கைதான் இந்த அஜிதா ஆக்னஸ்.

தனக்கென ஒரு கோஷ்டி சேர்த்துக் கொண்டு தனி ஆவர்த்தனம் செய்வதால் மற்ற நிர்வாகிகள் அதிருப்தியடைந்தனர். ஏற்கனவே ஆனந்த் தரப்பிலிருந்தும் அஜிதாவை கண்டித்து கட்சியில் பதவியெல்லாம் எதிர்பார்க்காதீர்கள் என்கிற செய்தியும் கறாராக கூறப்பட்டதாக தகவல் உண்டு. இதனைத் தொடர்ந்துதான் அலப்பறையாக ஆள் சேர்த்துக் கொண்டு நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஆக்னஸ் வந்திருக்கிறார்.

அஜிதா

பனையூர் அலுவலகத்தை சுத்து போட்டிருந்த உளவுத்துறையினரும் கூட்டத்தின் ஒவ்வொரு நகர்வையும் அதிருப்தியாளர்கள் யார் யார் என்பதையும் கவனமாக நோட்ஸ் எடுத்துக் கொண்டனர்.

அஜிதா

வெளியே இப்படி அலப்பறை ஓடிக்கொண்டிருக்க, உள்ளே ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக அழைத்து ஆனந்த் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். முக்கியமான விஷயங்களை பேசுவதால் உள்ளே இருந்த நிர்வாகிகளின் போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர். மாவட்ட அளவில் கட்சியின் நிலை என்னவாக இருக்கிறது, புதிதாக அறிவிக்கப்படவிருக்கும் நிர்வாகிகளின் பின்னணி என்ன என்பதைப் பற்றியெல்லாம் உள்ளே பேசப்பட்டதாக தகவல். தலைமை தேர்ந்தெடுத்து வைத்திருக்கும் புதிய நிர்வாகிகளை பற்றிய பழைய நிர்வாகிகளின் எண்ணங்களை கேட்டறியவே இப்படி பெர்சனல் மீட்டிங்காம். எல்லாம் முடிந்து நிர்வாகிகள் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு விஜய் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியே அழைத்துப் பேசுவார் என்றும் சொல்லப்படுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருக்கும் ஜான் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆளுங்கட்சிக்காக வேலை பார்க்கும் திமுக தலைமைக்கு நெருக்கமான ஒரு நிறுவனம்தான் இந்த ஆடியோவை வேண்டுமென்றே வெளியிட்டிருக்கிறது என விஜய் தரப்பு சந்தேகிக்கிறதாம்.

முக்கியமான தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாள் சமயங்களில் அலுவலகத்தில் அவர்களின் புகைப்படங்களுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவது விஜய்யின் வழக்கம். இந்நிலையில், விஜய் கொள்கைத் தலைவர்களாக அறிவித்திருக்கும் பெரியார், அம்பேத்கர், அஞ்சலையம்மாள் போன்றோருக்கு கட்சியின் அலுவலகத்திலேயே சிலை வைக்கும் பணிகளும் ஒருபுறம் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது.

பனையூர்

முக்கியமான கூட்டம் என்பதால் விஜய் கட்டாயம் வருவார் என பல நிர்வாகிகளும் அலுவலகத்துக்கு வெளியே காத்துக் கொண்டே இருந்தனர். ‘4 மணிக்கு தலைவர் வர்றாராம்…’ என தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தனர்.அதேசமயத்தில், விஜய் ஷுட்டிங்கில் இருப்பதாகவும் ஒரு தகவல் கிடைக்கப் பெற்றது.

பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு விஜய்யிடம் இறுதிப்பட்டியல் ஒப்படைக்கப்பட்டு தை மாதம் முடிவதற்குள் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் சொல்கிறார்கள் தலைமைக்கு நெருக்கமானவர்கள்.