“டங்ஸ்டன் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளது மதுரை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த மேலூர் வட்டார மக்கள் கடந்த 7-ஆம் தேதி மேலூரிலிருந்து மதுரை தமுக்கம் வரை மிகப்பெரும் பேரணியை நடத்தினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த பேரணி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் அழைப்பு விடுத்த இப்பேரணியில் பொதுமக்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். சில இடங்களில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம், சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் பேரணியில் வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரை குறிவைத்து காவல்துறை இழுத்துச் சென்றது ஏன்? என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டதை முழுமனதாக மேலூர் மக்கள் வரவேற்றுள்ளனர். நேற்று நடந்த பேரணியுமே இத்திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையோடுதான் நடந்தது. இப்படியான நிலையில் நேற்று நடந்த பேரணியில் டி.ஒய்.எப்.ஐ மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் தமிழரசனை மட்டும் காவல்துறை குறிவைத்து இழுத்துச் சென்றது ஏன்? மேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இத்திட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர் தோழர் தமிழரசன்.
சமீபத்தில் டி.ஒய்.எப்.ஐ நடத்திய மூன்று நாட்கள் நடைபயணத்தின் பொறுப்பாளர் அவர். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய பேரணியில் அவரை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல்துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? அங்கிருக்கும் மக்கள் தமிழரசனை காவல்துறையிடமிருந்து மீட்டிருக்காவிட்டால் காவல்துறை தமிழரசனை என்ன செய்திருக்கும் என்கிற கேள்விகள் எழுகின்றன. காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது., சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு சிபிஎம்மின் முன்னாள் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக அரசை விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு திமுகவினர் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக விமர்சித்து வருகிறார்கள். திமுகவின் நாளிதழான முரசொலியும் விமர்சித்திருந்தது. அதைத் தொடர்ந்து ஆ.ராசா எம்.பி-யும் கம்யூனிஸ்ட்களை விமர்சித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிபிஎம் நிர்வாகி மீது காவல்துறை நடந்துகொண்ட செயலுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.