`நாட்டின் 18% செல்வத்தை 2000 குடும்பங்கள் மட்டுமே..!’ – தொழிலதிபர் சாந்தனு தேஷ்பாண்டே சொல்வதென்ன?

இந்தியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இது பொருளாதாரச் சமத்துவமின்மை எனக் குறிப்பிடப்பட்டுகிறது. அதாவது, பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்… ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகிறார்கள். மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசின் ஆட்சியில், இந்த சதவிகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது என்றக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரபல பாம்பே ஷேவிங் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தனு தேஷ்பாண்டே, இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க சமத்துவமின்மை குறித்து மீண்டும் விவாதத்தை தொடங்கியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் லிங்க்ட்இன் பதிவில், “நாட்டின் செல்வத்தில் 18 சதவிகித செல்வத்தை வெறும் 2,000 குடும்பங்கள் மட்டுமே கட்டுப்படுத்துகின்றன. ஆனால் மொத்த வரிகளாக அவர்களிடமிருந்து 1.8 சதவிகிதம் மட்டுமே நாட்டுக்கு கிடைக்கிறது. இது பைத்தியக்காரத்தனமான சமத்துவமின்மை.

வெற்றிகரமான தொழில்முனைவோர் பலர், ‘கடினமாக உழைத்து மேலே வாருங்கள்’ என்று ஊக்குவிக்கும் அதே வேளையில், பெரும்பாலான இந்தியர்களின் யதார்த்தம் முற்றிலும் வேறாக இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலானவர்கள் ஆர்வத்தினாலோ அல்லது விருப்பத்தினாலோ வேலை செய்வதில்லை. அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பு இல்லாததால், தங்கள் குடும்பங்களை ஆதரிக்க வேண்டிய அவசியத்தால்தான் வேலை செய்கிறார்கள். ஆம், பெரும்பாலான மக்கள் தங்கள் வேலைகளை விரும்புவதில்லை என்பது எனக்குத் தெரியவந்த சோகமான, தாமதமான செய்திகளில் ஒன்று.

பொருளாதாரம்

இந்தியாவில் உள்ள அனைவருக்கும், உணவுக்கான பணமும், அவர்களின் தற்போதைய வேலைகள் வழங்கும் நிதிப் பாதுகாப்பும் வழங்கப்பட்டால், 99% பேர் அடுத்த நாள் வேலைக்கு வரமாட்டார்கள். இந்த அதிருப்தி பல்வேறு துறைகளில் பரவியுள்ளது. நீல காலர் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் முதல் தொழிற்சாலை தொழிலாளர்கள், காப்பீட்டு முகவர்கள், வங்கியாளர்கள், சிறு வணிக உரிமையாளர்கள், பொழுதுபோக்குத் துறையில் இருப்பவர்கள் வரை அனைவருக்கும் அடிப்படை பிரச்னை ஒன்றுதான்.

உண்மையான ஆர்வத்தைவிட அவர்களின் பொருளாதார நிர்பந்தம்தான் அவர்களை சோர்வாக்குகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.