வரவிருக்கும் டெல்லி சட்டசபைத் தேர்தலையொட்டி, உச்ச நீதிமன்றம் தேர்தல் இலவசங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. நீதிபதிகளின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை நிறைவேற்றுவதை மாநில அரசுகள் தவறிவிட்டாலும், தேர்தல் காலங்களில் இலவச திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுவது குறித்து நீதிமன்றம் ஆச்சர்யம் தெரிவித்தது.
அகில இந்திய நீதிபதிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.ஜி.மசிஹ் அடங்கிய பெஞ்ச், நீதிபதிகளுக்குப் போதுமான ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படாமை குறித்து கவலை வெளியிட்டது.
இது தொடர்பாகப் பேசிய நீதிபதிகள், “மாநில அரசுகள், நீதிபதிகளின் ஊதியம் வழங்கும்போது நிதிப் பற்றாக்குறையை காரணமாக காட்டுகின்றன. ஆனால் தேர்தல் காலங்களில் இலவச திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை அறிவிக்க எந்த தடையுமின்றி செயல்படுகின்றன” என்று தெரிவித்தனர்.
நீதிபதிகள் சமீபத்திய சில உதாரணங்களை மேற்கோள் காட்டியது. அதில் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதியின் ‘லட்கி பஹின்’ திட்டத்தையும், டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டினர்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, ‘முக்ய மந்திரி மகிளா சம்மன் யோஜனா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி, தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,100 வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
அதேசமயம், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தால், டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் ₹2,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
டெல்லி சட்டசபைத் தேர்தல் விவரங்கள்:-
டெல்லி சட்டசபைக்கு 70 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிப்ரவரி 5 அன்று நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 அன்று நடைபெறும். வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 17 கடைசி நாளாகும், மற்றும் ஜனவரி 18-க்குள் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படும்.
இந்த தேர்தல் பரப்பில், வாக்காளர்களை ஈர்க்கும் இலவச திட்டங்கள் குறித்த விவாதம் அரசியல் மற்றும் நீதித்துறைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.