அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் கடந்த வாரம் பாலியல் வன்முறைக்கு ஆளானார். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதை கையில் எடுத்திருக்கும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் மூலமாக கடும் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்த சூழலில்தான் த.வெ.க தலைவர் விஜய் நேற்று ஆளுநர் ரவியை சந்தித்து பேசினார்.

அப்போது 3 பக்கங்கள் கொண்ட கோரிக்கை மனுவை வழங்கினார். அதில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் மாநில அரசு கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
முன்னதாக விஜய் எழுதிய கடிதத்தில், “அன்புத் தங்கைகளே, கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கு எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும், சொல்லொனா வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது, நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என தெரிவித்திருந்தார்.
இதேபோல் இந்த விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் தனது இல்லத்தின் முன்பு, தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னதாக திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரையில் காலில் காலணி அணிய மாட்டேன் என அறிவித்திருந்தார். பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவியை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்தது. ஆளுநருடனான சந்திப்பின்போது, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக நீதிப்பேரணி நடத்துவதாகவும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை, “அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி தி.மு.கவைச் சேர்ந்தவர் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க அரசு முயற்சி செய்வதை கண்டித்தும், தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமாரதி தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை, நீதிப்பேரணி நடைபெறவுள்ளது.
வரும் ஜனவரி 3 அன்று தொடங்கவிருக்கும் இந்தப் பேரணி, சென்னையில் நிறைவு பெறும்போது தமிழக ஆளுநர் அவர்களைச் சந்தித்து, தமிழக பா.ஜ.க மகளிர் அணி சார்பில் தங்கள் கோரிக்கை மனுவை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். இதேபோல் அ.தி.மு.க, நா.த.க என எதிர்க்கட்சிகள் அனைத்தும் தி.மு.க-வுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மூலமாக தி.மு.க-வும் எதிர் அரசியல் செய்து வருகிறது.

அண்ணாமலையின் போராட்ட அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “சாட்டையால் அடித்துக்கொள்வது என்பது ஒருவருக்கு கொடுக்கக்கூடிய தண்டனை அல்லது பாவ விமோசனம். எனவே, அண்ணாமலை செய்த தவறின் அடிப்படையில் பாவ விமோசனத்திற்காக சாட்டை அடித்துக் கொண்டாரா, அல்லது செய்த தவறுக்காக தனக்குத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டாரா? என்பதுதான் கேள்வியே தவிர, தி.மு.க அரசு அவருக்கு எந்த பாதகமும் செய்யவில்லை. பா.ஜ.க-வில் பழனி பாத யாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள். அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார். ஆனால், தி.மு.கவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுவதும் செருப்பு அணிய முடியாது.
ஞானசேகரனுக்கும், தி.மு.க-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் மீது பல வழக்குகள் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோன்று பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு போட வேண்டும் என்று சொன்னால், அதையும் ஆலோசித்து முடிவு செய்வோம். பொள்ளாச்சி சம்பவத்தை அப்போதைய அரசாங்கம் மறைத்தது, ஆனால் நாங்கள் மறைக்கவில்லை. குற்றவாளியை கைது செய்துள்ளோம்” என்றார்.

இதேபோல் விஜய், ஆளுநர் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, “அ.தி.மு.க போராட்டம் என்பது எள்ளி நகைக்க கூடிய ஒன்று. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடைபெற்றது. அப்போது, எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று அடங்காப்பிடாரித்தனமாக மறுத்தவர்கள் அவர்கள். கடைசியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி நாங்கள் அன்று நடவடிக்கை எடுக்க வைத்தோம். இன்று நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இப்பொழுது அ.தி.மு.க போராட்டம் என்பதெல்லாம் வீண் வேஷம். நாங்கள் இருக்கிறோம் என்று காண்பித்து கொள்வதற்காக அ.தி.மு.க-வினர் இப்படி கபட நாடகத்தை ஆடுகிறார்கள். தங்கள் மீது உள்ள குற்றச்சாட்டுக்களை மறந்து விட்டு எங்கள் மீது பழி சுமத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பார்க்கிறார்கள்.

இந்த ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது தான் உண்மையான சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார். அது, இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் நடமாட முடிகிறதா என்று. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம்.
பெண்கள் கல்வியில்,
பாதுகாப்பில் சிறந்த தமிழ்நாடு!!
களத்தில் தமிழ்நாட்டு பெண் மாணவர்கள்!!#அரியலூர் #Wearesafein_Tamilnadu#Save_Girls_Education pic.twitter.com/Aq2zL204V7— R.Rajiv Gandhi ✨ (@rajiv_dmk) December 31, 2024
தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். பீகாரில் சென்று பாருங்கள். ஒரிசாவில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். வேறு மாநிலத்திற்கு சென்று பாருங்கள். அங்கே எல்லாம் பார்த்துவிட்டு வந்து இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நிரூபிக்கின்றோம். இல்லையென்றால் நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் எங்களை தான் நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம். எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று சொல்வதை போல எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் லண்டன் சென்று படித்துவிட்டு வந்திருக்கின்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைமை இருக்கிறது” என்றார்.

மேலும் தி.மு.க மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில், “பெண்கள் கல்வியில், பாதுகாப்பில் சிறந்த தமிழ்நாடு” என்கிற பாதைகளுடன் மாணவிகள் அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்த அணிவகுப்பு பட்டுகோட்டை, சத்தியமங்கலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் நடந்தது. இவ்வாறு நடக்கும் சண்டை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.