மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங், அந்த மாநிலத்தில் இன மோதல் மற்றும் அதன் நீட்சியாக நடந்த கலவரங்கள், தாக்குதல்கள் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
அத்துடன் வரவிருக்கும் 2025-ம் ஆண்டில் இயல்பு நிலை திரும்பும் என நம்புவதாக புத்தாண்டு குறிப்பில் கூறியுள்ளார்.
“இந்த மொத்த ஆண்டும் மிக துரதிஷ்டவசமாக அமைந்தது. கடந்த மே 3ம் (03.05.2023) முதல் இன்றுவரை நடைபெறும் சம்பவங்களுக்காக நான் மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். பலர் தங்களது அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் தங்கள் வீடுகளை நீங்கியிருக்கின்றனர். நான் மிகவும் வருந்துகிறேன். மன்னிப்புக் கேட்கிறேன்.
ஆனால், கடந்த 3, 4 மாதங்களாக அமைதிக்கான சூழல் மேம்படுவதைப் பார்த்து நம்பிக்கை கொள்கிறேன். 2025ல் இயல்புநிலை திரும்புமென நம்பிக்கைக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

“மாநிலத்தில் உள்ள அனைத்து சமூகங்களிடமும் நான் முறையிடுவது என்னவென்றால், என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. நீங்கள் பழைய தவறுகளை மறக்கவும் மன்னிக்கவும் வேண்டும். நாம் அமைதியான மற்றும் வளமான மணிப்பூரை நோக்கிய புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும்.” என்றும், மணிப்பூரில் உள்ள 35 பழங்குடியின மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Manipur Violence
மணிப்பூர் மாநிலத்தில் 53 விழுக்காடு மெய்தி மக்கள் இருக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கின்றனர்.
நாகாக்கள் மற்றும் குக்கிகள் உட்பட பழங்குடியினர் 40 விழுக்காடு உள்ளனர். இவர்கள் மலைப்பிரதேசங்களில் வசிக்கின்றனர்.
மெய்தி மக்கள் எஸ்.டி பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதும், அதற்கு குக்கி மக்களின் எதிர்ப்பும் மணிப்பூர் வன்முறைக்கு காரணமாக அமைந்தது. 2023ம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் வன்முறை தொடங்கியது முதல் மணிப்பூரில் 180 பேர் மரணித்துள்ளனர்.