சென்னையின் இதயப் பகுதியான அடையாறு, இந்திரா நகரில் (வார்டு 170 , மண்டலம் 13 ,பகுதி 40 ) அமைந்துள்ளது பெருநகர மாநகராட்சி பூங்கா.
இப்பூங்காவில் உள்ள சிறுவர் விளையாட்டு திடலில் இருக்கும் விளையாட்டு உபகரணங்கள் ஒன்று கூட பயன்படுத்தும் நிலையில் இல்லை. பழுதடைந்தும் குப்பை கூளங்களுடன் மிகவும் அசுத்தமாகவும் காணப்படுகிறது.
“குழந்தைகள் இந்த பூங்காவில் விளையாட வந்தால், காயமோ தொற்றோ ஏற்படுவது உறுதி” என்று வேதனையுடன் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அதே போல், பெரியவர்கள் பயன்படுத்தும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தில் அமைந்துள்ள பயிற்சி கருவிகள் பறவைகளின் எச்சங்களுடன், அழுக்கு படிந்து மோசமான நிலையில் உள்ளது. அத்துடன், தரையில் நடந்து செல்ல முடியாதபடி அசுத்தமாக காணப்படுகிறது.

நடைப்பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நடைமேடைகள் ஆங்காங்கே சிதிலமடைந்தும் மேடும் பள்ளமுமாகவும் இருக்கிறது.
ஓய்வுக்காக அமரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் பாதிக்கு மேல் மேற்கூரை இல்லாமல் இருப்பதால் பறவைகளின் எச்சம் அளவுக்கு அதிகமாக சிதறி காணப்படுவதால், அந்த இருக்கையில் உட்கார முடியாத அளவுக்கு அசுத்தமாக உள்ளது.
சில இருக்கைகள் நிழற்குடைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் நடைமேடையில் இருந்து இரண்டு அடி தள்ளி சற்று பள்ளத்தில் அமைந்துள்ளதால் வயதானவர்களோ முடியாதவர்களோ அங்கே இறங்கி அமருவதற்கு சிரமப்படுகிறார்கள்.

மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பதால் யாராலும் இது போன்ற இருக்கைகளை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. குப்பை சேகரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கிடங்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பைகள் சில மாதங்களாக அகற்றப்படாமல் அப்படியே உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது.
மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ள அறைகளின் கதவுகள் கழட்டி வைக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
பூங்காவின் ஒரு பகுதியில் அமைந்துள்ள மூங்கில் மரங்கள் திடீர் திடீரென காணாமல் போவதாக அங்கு நடைப்பயிற்சி செல்பவர்கள் கூறுகிறார்கள். அதை நிரூபிக்கும் விதத்தில் அரைகுறையாக இருக்கும் மூங்கில் கொம்புகள் அவசரத்தில் வெட்டி எடுத்ததை போன்று உள்ளது .












என்னதான் மரங்கள் அடர்ந்த பூங்காக்களில் பறவைகளின் எச்சத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்றாலும், மக்கள் பயன்படுத்தும் நடைமேடை மற்றும் இருக்கைகளுக்கு மட்டுமாவது கூடாரங்கள் அமைத்து பூங்காவை சுத்தமாக வைக்க முயற்சி செய்ய வேண்டுமென மக்கள் ஆதங்கத்துடன் கோரிக்கை வைக்கின்றனர்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் இந்த பூங்காவின் இருக்கைகளையும், விளையாட்டு உபகரணங்களையும் சுத்தமாக வைத்திருக்கவும், மக்கள் பயன்படுத்தும் விதமாகவும் வைத்திருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
“இந்த பூங்கா மட்டுமல்ல, பல நகரங்களில் அரசு பூங்கா அமைக்கும் போது, அழகாக உள்ளது. ஆனால், தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் போவதால் மக்கள் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. பராமரிப்பு இருந்தால் மட்டுமே செலவு செய்து பூங்கா ஏற்படுத்தியதன் நோக்கம் நிறைவேறும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.