இந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய். அதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் நடந்த மாநாடு, அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆளும் அரசின் மீதான நேரடிக் குற்றச்சாட்டுகள் எனத் தீவிரமாகப் பேசிவந்தார். இதற்கிடையில், 2026-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவோம் என உறுதியாக நம்பும் த.வெ.க, மழை வெள்ள நிவாரணம் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றனர்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் கொலை, பாலியல் வன்கொடுமை நிகழ்வுகள் அரங்கேறிவருகிறது. அதில் தற்போது அரசியல் புயலைக் கிளப்பியிருக்கும் சம்பவம், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், மாணவி ஒருவரிடம் வெளிநபர் ஒருவர் அத்துமீறி பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட விவகாரம்.
இந்த விவகாரத்தில் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேசியும், போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், ஆரம்பத்தில் எக்ஸ் பதிவு மூலம் கண்டனங்களைத் தெரிவித்திருந்த நிலையில், பெண்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். இந்த நிலையில் இன்று இந்த விவகாரத்தில் ஆளுநரையும் சந்திக்க இருக்கிறார். அரசியல் களத்தில் ஒரு விவகாரத்தை கையில் எடுத்து போராட த.வெ.க தொடர்ந்து திட்டமிட்டு வந்தது. இந்த நிலையில் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் பெரிதாக வெடித்தது.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் அண்ணா பல்கலைக் கழகத்தில் போராட்டத்தை முன்னெடுத்த SFI தோழர்களின் தொடர்பு எண்ணை வாங்கியதாகவும், பாதிக்கப்பட்ட மாணவியிடம் விஜய் பேச உள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்டிருந்த நிலையில், மதியம் 1 மணியளவில் ஆளுநர் நேரம் ஒதுக்கியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.