“நான் ஏன் இங்கே இருக்கிறேன்?” – விமான விபத்தில் தப்பிய 2 பேர்… 175 பேர் பலி -தென் கொரியா சோகம்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலிருந்து ஜெஜு ஏர் விமானம் 7C2216, 175 பயணிகள், 6 பணியாளர்களுடன் தென் கொரியாவை நோக்கிப் புறப்பட்டது. தென் கொரியாவின் சர்வதேச விமான நிலையமான முவான் விமான நிலையத்தில் நேற்று தரையிறங்கிக் கொண்டிருந்தபோது பறவை மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் நிலைத் தடுமாறிய விமானம், கட்டுப்பாட்டை இழந்து சுவரில் மோதி தீப்பிடித்து, வெடித்து சிதறியது. இதில், பயணிகள் 175 பேரும், பணியாளர்கள் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் இரண்டு பணியாளர்கள் மட்டும் மீட்கப்பட்டிருக்கின்றனர்.

ஜெஜு ஏர் விமானம் 7C2216

இது தொடர்பாக பேசிய முவான் நிலைய தீயணைப்புத் துறைத் தலைவர் லீ ஜங்-ஹியூன், “பயணிகளுக்கு உதவுவதற்காக விமானத்தின் வால் பகுதியில் இருக்கவைக்கப்பட்ட இரண்டு பணியாளர்கள் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு உடலின் சில இடங்களில் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது. எனவே, உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்து மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டது.

மருத்துவர்கள், “ஒருவர் 32 வயதான லீ. அவருக்கு நினைவு திரும்பியவுடன்… என்ன ஆனது? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? எனத் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தார். அவர் விமானம் தரையிறங்கும்போது, இருக்கையில் அமர்ந்து சீட் பெல்ட் அணிந்தது வரைதான் அவருக்கு நினைவு இருக்கிறது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியவில்லை. இடது தோள்பட்டை மற்றும் தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

ஜெஜு ஏர் விமானம் 7C2216

மற்றொருவர் குவான். 25 வயதான அவருக்கும் விபத்துக் குறித்து எதுவும் நினைவில் இல்லை. தலை, கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. வயிற்றுப் பகுதியில் அதிக வலியை உணர்வதாக கூறினார். அதற்கான பரிசோதனைகள் செய்யப்படுகிறது” என்றனர்.

“1997-ம் ஆண்டு குவாமில் ஏற்பட்ட கொரிய விமான விபத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, ஏற்பட்ட மோசமான விபத்து இதுதான்” என போக்குவரத்து அமைச்சகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த விமான விபத்து தென் கொரியாவை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.