கோவை தனியார் ஹோட்டலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு துயரமான நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறோம். சில நேரத்தில் நாம் எதற்காக அரசியலில் இருக்கிறோம் என்ற கேள்வி எல்லோருக்கும் வரும். பாதி நேரம் உண்மையில் நாம் தமிழகத்தில் அரசியல் செய்கிறோமா.

நமது அரசியல் மக்களுக்கு பயனளிக்கிறதா என்று என்னை நானே கேட்பேன். இன்று காலையில் இருந்து அரசியலில் தொடர்வதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுடைய அரசியல் பாதையை தீர்மானிக்கிற தருணம் இது. இனி வேறு மாதிரி அரசியல் தான் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட நபர் திமுகவைச் சேர்ந்தவர். அவர் நிறைய குற்ற பின்னணிகளை கொண்டவர். திமுக அமைச்சர்கள் அவர் கட்சி பொறுப்பாளரே இல்லை என்கிறார்கள். அவரைப் பற்றிய தகவல் முரசொலியிலேயே வந்துள்ளது. திமுக நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழில் அவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. நான் காவல்துறையில் 9 ஆண்டுகள் குப்பைக் கொட்டியுள்ளேன்.

தன்னுடைய தவறுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்காகவே திமுகவில் பதவியில் இருந்துள்ளார். திமுக என்னும் போர்வை இருந்துள்ளதால் மட்டுமே அவன் இந்த தவறை செய்துள்ளான். எப்படி அந்த எஃப்ஐஆர் வெளியானது. அந்தப் பெண்ணை தரக்குறைவாக காட்டுவது போல எஃப்ஐஆர் போட்டுள்ளனர். அதைப் பார்த்தால் என் ரத்தம் கொதிக்கிறது. இதற்கு திமுகவும், காவல்துறையும் வெட்கப்பட வேண்டும்.
தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் என்பதற்காக மரியாதையாக பேசுகிறேன். நான் தெருவுக்கு வந்தால் வேறு மாதிரி இருக்கும். இந்த அரசியல் ஆகாது. இதற்கு முடிவு கட்ட வேண்டும். இனி திமுகவை வேறு விதமாக டீல் செய்யப் போகிறோம். நாளை காலை 10 மணிக்கு என் வீட்டின் முன்பு எனக்கு நானே என்னை சாட்டையால் 6 முறை அடித்துக் கொள்ள போகிறேன். இதை பாஜக தொண்டர்கள் யாரும் செய்ய வேண்டாம்.

உங்கள் வீட்டின் முன்பு வந்து நின்றால் மட்டும் போதும். திமுகவை அழிக்க சூரசம்ஹாரம் செய்ய போகிறேன். இனி திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு போட மாட்டேன். 48 நாள்களுக்கு விரதம் இருந்து முருகனின் அறுபடை வீட்டுக்கு செல்லப் போகிறேன். இனிமேல் உங்களுக்கு மரியாதை எல்லாம் இல்லை.” என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்புக்காக தனியார் ஹோட்டல் வந்த அண்ணாமலை தொடக்கத்தில் இருந்தே கோபமாக இருந்தார். “இந்தப் பிரச்னையை தவிர வேறு எதைப் பற்றியும் பேச மாட்டேன்.” என்றார். மேலும் தனது மாநிலத் தலைவர் பதவியை, “வெங்காயம்” என குறிப்பிட்டார். செய்தியாளர் சந்திப்பு முடிந்து காலணியை கழற்றி, “இனி திமுக ஆட்சியை அகற்றும் வரை வெறும் கால் தான்.” என குறிப்பிட்டார்.

பிறகு தன் காலாணியை அவரே கைகளில் எடுத்து சென்று காரில் வைத்தார். நாளை காலை 10 மணியளவில் கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள அண்ணாமலையின் இல்லத்தின் முன்பாக சாட்டை அடித்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதற்காக கோயில் திருவிழாக்களில் பூசாரிகள் அடித்துக் கொள்ளும் புதிய சாட்டை ஒன்றும் வாங்கப்பட்டுள்ளது என்கிறார்கள் கட்சிக்காரர்கள் சிலர்.