திருவண்ணாமலையில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக உழவர் பேரியக்க மாநில மாநாடு நேற்று (டிசம்பர் 21) நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பா.ம.க-வின் நிறுவனரும், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் பேசும்போது, “உழவர்களைக் காக்க முடியாத இந்த அரசு ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. இதை ஓராண்டிலே நிச்சயமாகத் தமிழக மக்கள் செய்ய இருக்கிறார்கள். விவசாயிகளைப் படுகுழியில் தள்ள இருக்கின்ற திராவிட மாடல் அரசைத் தூக்கி எறியவும் தயாராக இருக்கிறார்கள். அடிப்படையில் நான் யாரென்று கேட்டால், உழவன் என்பதைத் தான் முதலில் கூறுவேன். எந்தப் பொருளாக இருந்தாலும் அதன் விலையை உற்பத்தி செய்பவர்கள்தான் தீர்மானிப்பர். ஆனால், வேளாண் விளைபொருள்களுக்கு மட்டும் அதை உற்பத்தி செய்யும் விவசாயிகளால் விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வறட்சி அல்லது வெள்ளத்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளைக் கணக்கில் கொண்டால் 20 பருவங்களில் சாகுபடி நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 8 பருவங்களில்தான் வெற்றிகரமாகச் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 12 பருவங்களிலும் இயற்கைப் பேரிடர்களால் உழவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
உழவர்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது. தமிழ்நாட்டில் உழவர்களின் வாக்குகளைப் பெருமளவில் வாங்கிதான் தி.மு.க ஆட்சிக்கு வந்தது. ஆனால், உழவர்களின் நலனுக்காக தி.மு.க அரசு ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. உழவர்களை `குண்டர்’ சட்டத்தில் அடைத்த கொடூர அரசு இந்த தி.மு.க அரசு.
மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விளைநிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்த்து குரல் கொடுத்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகுத் தலைக்கீழாக மாறிவிட்டார்.
தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போதும் உழவர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டின் வாயிலாக விவசாயிகளுக்கு ஒரு செய்தி சொல்ல விரும்புகிறேன். ஏர்ப் பிடிக்கும் உழவர்களாகிய நீங்கள் போர்க்குணத்துடன் திகழ வேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தை விடவும் தமிழகத்தில் 6 மடங்கு அதிகமாக மழை பெய்கிறது. ராஜஸ்தானில் குடிநீர் பஞ்சம் இல்லை. ஆனால், ஆண்டுக்குச் சராசரி மழை பெய்யும் தமிழ்நாட்டில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது. தமிழகம் தண்ணீர் மேலாண்மையில் மிகவும் கீழ்நிலையில் இருப்பதே பஞ்சத்திற்குக் காரணம். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கையான ஒன்றுதான். மேலும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் ஆற்று மணல் எடுத்து தமிழகத்துக்கு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் கடத்துவதே இதற்கு முக்கிய காரணமாகும். நாம் அடுத்து நடத்தப் போவது ஒரு போராட்டம். அது விவசாயிகளுக்கானது. 10 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து சென்னையில் போர் நினைவுச் சின்னம் இடத்தில் முற்றுகையிடப் போகிறோம். இடத்தை சொல்லிவிட்டேன். தேதியை விரைவில் அறிவிக்கிறேன்’’ என்றார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…