திருமணம் செய்து வைக்காத ஆத்திரம்; தந்தையை வெட்டிவிட்டு விபரீத முடிவெடுத்த தீயணைப்பு வீரர்!

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மேலப்புனவாசல் பகுதியை சேர்ந்த தம்பதி சேகர் – செந்தமிழ்ச்செல்வி, இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விக்னேஷ்(29), திருவையாறு தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்தார். இந்நிலையில், சமீபகாலமாக விக்னேஷ் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி கேட்டு வந்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட தீயணைப்பு வீரர் விக்னேஷ்

ஆனால், சேகர், விக்னேஷ்க்கு திருமணத்துக்கு பெண் பார்க்கவில்லை என சொல்லப்படுகிறது. அத்துடன் திருமணம் குறித்து கேட்கும் போதெல்லாம் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவ்வப்போது இருவருக்கும் சண்டை நடக்கும். இந்த நிலையில் திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இருந்த விக்னேஷ், சேகருடன் சண்டை போட்டிருக்கிறார். அப்போது அரிவாளால் பின் கழுத்து பகுதியில் சேகரை வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆத்திரத்தில் அப்பாவை வெட்டி விட்டதாக மனமுடைந்து புலம்பிக்கொண்டிருந்த விக்னேஷ், வீட்டில் அறைக்குள் தனியாக சென்று கதவை சாத்திக்கொண்டார். பின்னர் தற்கொலை செய்வதற்காக பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறியிருக்கிறார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றதுடன் விக்னேஷை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் தீ காயத்துடன் அங்கு சிகிச்சையில் இருந்த விக்னேஷ் உயிரிழந்தார். இது குறித்து மருவூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.