தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் சமீபகாலமாக கணவன் – மனைவி விவாகரத்து வழக்குகள் அதிகம் நடைபெற்று வருகின்றன. சாமானிய மக்கள் தொடங்கி திரை பிரபலங்கள் வரை விவாகரத்து செய்வது அதிகரித்து விட்டது.
இந்நிலையில் கோவை மாவட்டம் குடும்ப நல நீதிமன்றத்தில் ஒரு ஆண் தன் மனைவியிடம் விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், “உங்கள் மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.” என்று கணவருக்கு உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன்படி அந்த நபர் தன் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதற்காக நீதிமன்றத்துக்கு நேற்று பணம் கொண்டு வந்தார்.
அப்போது ரூ.80,000 தொகையை நோட்டாக கொடுக்காமல் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நாணயங்களாக 20 மூட்டைகளில் எடுத்து வந்து நீதிபதி முன்னிலையில் வைத்தார்.
இதைப் பார்த்து மொத்த நீதிமன்றமும் அதிர்ச்சியடைந்தது. நீதிபதியோ, ”இப்படி நாணயங்களை மூட்டையில் கொண்டு வருவதை ஏற்க முடியாது. இந்த தொகையை ரூபாய் நோட்டாக மாற்றி ஜீவனாம்சம் கொடுங்கள்.” என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையடுத்து அந்த நபர் நாணயம் மூட்டைகளை காரில் எடுத்துச் சென்றார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.