பிரசவத்தின்போது சேய், தாய் உயிரிழந்த சோகம் – அரசு மருத்துவமனையில் போலீஸ் விசாரணை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன்.

இவர் ஆவடி பட்டாலியன் படையில் காவலராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் மனைவி அனிதா (24). இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அனிதாவுக்கு கடந்த 12-ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, அடுக்கம்பாறைப் பகுதியிலுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று (16-ம் தேதி) இரவு பிரசவ வலி அதிகமான நிலையில் இன்று காலை குழந்தைப் பேறுக்கான அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது.

உயிரிழந்த அனிதா

அப்போது, உயிரற்ற நிலையில் குழந்தை பிரசவித்திருக்கிறது. அதன் பிறகு அனிதாவின் உடல்நிலையும் கவலைக்கிடமாகி சிறிது நேரத்தில் அவரும் உயிரிழந்துவிட்டார். முறையான சிகிச்சை அளிக்காததால்தான் தாயும், சேயும் இறந்துவிட்டதாக மருத்துவமனை மீது குற்றம்சாட்டியிருக்கிறார் கணவர் கோட்டீஸ்வரன். இந்த துயரச் சம்பவம் குறித்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசவத்தில் தாயும், சேயும் உயிரிழந்திருப்பது, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.