பெரியாரின் பேரன், ஈவிகே.சம்பத்தின் மகன் என பெரும் அடையாளங்களுடன் அரசியல் களத்துக்கு வந்தவர்தான் ஈவிகேஎஸ்.இளங்கோவன். கூடவே அதிரடி அரசியலுக்கும் சொந்தக்காரர். முதல் முறையாக 1984 சட்டமன்ற தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். ராஜீவ்காந்தி மரணமடைந்த நேரத்தில் ‘தி.மு.க-வுக்கு எதிராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அளித்த பேட்டி பெரும் புயலைகிளப்பியது. பிறகு 2004 நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி-யானார். அப்போது மத்திய ஜவுளி துறை இணை அமைச்சராகவும் இருந்தார்.
அந்த நேரத்தில், ‘காங்கிரஸுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும். திறனற்ற ஆட்சியைக் கருணாநிதி செய்கிறார்’ என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில்தான் தி.மு.க இருந்தது. இதையடுத்து ‘இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என டெல்லிக்குக் கோரிக்கை வைத்தார், கருணாநிதி. அதேகாலகட்டத்தில்தான் கருணாநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்த விஜயகாந்த்தின் வீட்டுக்கே சென்று இனிப்பு வழங்கினார், இளங்கோவன். 2016 சட்டமன்றத் தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகளைக் காங்கிரஸுக்குத் தருவதற்குக் கருணாநிதி தயாராக இல்லை. விடாப்பிடியாக 41 தொகுதிகளை வாங்கினார் இளங்கோவன். தான் இரண்டு முறை மாநில தலைவராக இருந்தபோதும் தி.மு.க-வைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இப்படி தி.மு.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்த இளங்கோவன் பிற்காலத்தில் பெரும் ஆதரவாளராக மாறிவிட்டார்.
அதாவது கடந்த ஆண்டு நவம்பரில் அப்போதைய மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் இடங்களை தி.மு.க-விடம் பெற வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. உடனே செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், ‘அழகிரி மர்ம கூட்டம் நடத்துகிறார். காங்கிரஸில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை” என்றார். இதேபோல் ஆரணியில் பேசிய செல்வப்பெருந்தகை, “57 ஆண்டுகள் நாம் ஏமாந்தது போதும். தேர்தல்களின்போது, தொகுதிகளைக் கேட்கும் நிலையிலிருந்து தொகுதிகளைப் பிரித்துக் கொடுக்கும் நிலைக்குக் காங்கிரஸ் கட்சி வளர வேண்டும். காமராஜர் ஆட்சி மீண்டும் மலர நிர்வாகிகள் பாடுபட வேண்டும்” என்றார். இதற்கு இளங்கோவன், “ஆட்சிக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ‘திராவிட ஆட்சி, காமராஜர் ஆட்சி, கக்கன் ஆட்சி’ என்றெல்லாம் பெயர் வைக்கலாம். என்னைப் பொறுத்தவரையில், ஸ்டாலினுடைய ஆட்சியைக் காமராஜர் ஆட்சி எனச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்றார்.

இதேபோல் கடந்த ஜூனில் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பெருந்தகை, “நாம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோமா… அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா… எத்தனை காலம் பிறரைச் சார்ந்திருக்கப் போகிறோம். தோழமையுடன் இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. ஆனால் எவ்வளவு காலம் பிறரைச் சார்ந்து இருக்கப் போகிறோம் என்கிற கேள்விக்கான விடையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்” என்று சூசகமாகப் பேசினார். அடுத்து மைக் பிடித்த இளங்கோவன், “இன்று 40 இடங்கள் கிடைத்திருப்பதற்கு தி.மு.க-வும், ஸ்டாலினும்தான் காரணம். நாம் தனித்து நின்றபோது சிவகங்கை, கன்னியாகுமரியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றுத் தோற்றோம். பிற இடங்களில் டெபாசிட் கூடப் பெற முடியவில்லை. ஆசை இருக்கலாம். ஆனால் அது பேராசையாக மாறி கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விடக் கூடாது” எனக் கொதித்தார்.

இந்த சூழலில்தான் கார்த்தி சிதம்பரம், “கூட்டணி தர்மம் என்று கூறி கூனி, குறுகி இருக்கக் கூடாது. வருகிற 2029-ல் இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். ஆனால் அதற்கு முன் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸுக்கு முக்கியமான தேர்தல். அப்போது அமையும் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பெற வேண்டும்” எனப் பேசியிருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய இளங்கோவன், “தி.மு.க தயவால்தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கார்த்தி சிதம்பரம் கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது எனத் தேர்தலுக்கு முன்பே கார்த்தி சிதம்பரம் கூறி இருக்கலாமே.. கார்த்தி சிதம்பரம் சுயநலத்துடன் பேசி வருகிறார். தி.மு.க வேலை செய்யாவிட்டால் கார்த்தி சிதம்பரம் டெபாசிட் கூடப் பெற்றிருக்க முடியாது” எனக் கடுமை காட்டியிருந்தார்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்களிலேயே அதிரடி அரசியல் என்றால் ஈவிகேஎஸ்.இளங்கோவன்தான். அவரது காலத்தில்தான் தமிழகத்தில் காங்கிரஸ் எப்போதும் லைம்லைட்டில் இருக்கும். கூட்டணி குறித்தெல்லாம் கவலைப்படாமல் இளங்கோவன் கடுமையாகக் கருணாநிதியை விமர்சனம் செய்திருக்கிறார். அதனால்தான் பல தேர்தல்களில் இளங்கோவன் தோல்விக்கு தி.மு.கவே காரணமாக இருந்தது என்று எல்லாம் சொல்வார்கள். இது அவருக்கும் நன்றாகவே தெரியும். எனவேதான் தி.மு.க-வுக்கு எதிரான மனநிலையிலிருந்து வந்தார். இந்த சூழலில்தான் கடந்த 2023-ம் ஆண்டு அவரது மூத்த மகனும் ஈரோடு கிழக்கு எம்எல்ஏ-வுமான திருமகன் ஈவெரா மரணமடைந்தார்.

முன்னதாக தேனி நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியிலிருந்த இளங்கோவனுக்குப் பேரிடியாக இது விழுந்தது. அப்போது அரசியலிலிருந்தே ஒதுங்கி இருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே இளங்கோவனின் இல்லத்துக்குச் சென்று தேர்தலில் நிற்க வைத்தார். மேலும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் தி.மு.க பெரும் உதவி செய்தது. இதனால்தான் பழைய விஷயங்களை மறந்து திமுகவின் தீவிர ஆதரவாளராக இளங்கோவன் மாறிப்போனார். எப்படியோ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அதிரடியான தலைவரை இழந்து நிற்கிறது” என்றனர்.
கடந்த மாதம் 13-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட போதும் அவர் காலமானார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரரான அவரை இழந்த சோகத்தில் கண்ணீரில் மிதக்கிறது சத்தியமூர்த்தி பவன்!