வயநாடு நிலச்சரிவு: `ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணி’ – கேரள அரசிடம் ரூ.132 கோடி கேட்கும் மத்திய அரசு!

கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மல, முண்டக்கை பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் இறுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், நேவி போன்ற பாதுகாப்பு படை வீரர்கள் மீட்புப் பணிக்காக சென்றிருந்தனர். இடர்பாடுகளில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டரில் ஏர் லிஃப்டிங் மூலம் மீட்கப்பட்டனர். வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக சுமார் 1,202 கோடி ரூபாய் வேண்டும் என கேரளா அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது . நிலச்சரிவு நிகழ்ந்து நான்கு மாதங்கள் ஆகியும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கேரள அரசு குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் பேரிடர்களின்போது ஹெலிகாப்டரில் மீட்புப் பணியில் ஈடுபட்டதற்காக 132 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டர்

கேரளாவில் 2019-ம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பின்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். அது போன்று இந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த வயநாடு நிலச்சரிவின்போதும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் நடைபெற்றன. 2018-ம் ஆண்டுக்கு பின்னர் இப்போதுவரை கேரளாவில் நடைபெற்ற பேரிடர்களின்போது நடந்த ஹெலிகாப்டர் மீட்புப் பணிகளுக்கு எல்லாம் சேர்த்து 132 கோடியே 62 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என ஏர் வைஸ் மார்சல் கேரளா தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணி

வயநாடு நிலச்சரிவு பேரிடரின்போது முதல் நாளில் ஹெலிகாப்டரில் நடந்த மீட்புப் பணிக்காக மட்டும் 8 கோடியே 91 லட்சத்து 23 ஆயிரத்து 500 ரூபாய் செலவு கணக்கில் குறிப்பிடப்படுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மறுகுடியமர்த்த மத்திய அரசு நிதி வழங்கவில்லை என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் சில நாள்களுக்கு முன்பு கடுமையாக விமர்சித்திருந்தார். ஆனாலும், மத்திய அரசு நிதி இன்னும் ஒதுக்கவில்லை. அதே சமயம் ஹெலிகாப்டர் மூலம் நடந்த மீட்புப் பணிகளுக்காக 132 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ள விவகாரம், கேரள அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.