Ayya Vaikundar: “பிரதமர் மோடி தர்மயுகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்” -ஆளுநர் ரவி கூறியது என்ன?

அகிலத்திரட்டு உதயதின விழா

அகில உலக அய்யா பதிகள் கூட்டமைப்பு மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம்பதி அன்பு கொடி மக்கள் இணைந்து புனித அகிலத்திரட்டு உதயதின விழா கொண்டாடியது. அய்யனார்குளம் துலங்கும் துவரயம்பதியிலிருந்து பாதயாத்திரை துவங்கி தாமரைக்குளம்பதி வரை நடைபெற்றது.

170 ஆண்டுகள் பழைமையான புனித அகிலத்திரட்டு திருஏடு பெட்டகத்துடன் நடைபெற்ற பாதயாத்திரை, தாமரைக்குளம் பதியை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு அய்யாவழி ஆய்வு  மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரை:

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், “மகாவிஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாமிதோப்பிற்கு வந்து  தரிசனம் செய்துள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்பவனில் நடந்த அய்யா வைகுண்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். தற்போது, 3-வது முறையாக அய்யா வைகுண்டர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். சனாதனத்திற்கு ஆபத்து ஏற்படும் போது நாராயணன் அவதரிக்கிறார் என்று கூறப்படுகிறது. நம்மில்  உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் கிடையாது. சனாதனம் என்றால் சமத்துவம். சமத்துவம் தான் சனாதான தர்மம். பல மொழிகளில் பேசலாம், உணவு பழக்கங்கள், பல உடைகள் அணியலாம், பல வழிபாட்டு முறைகள் இருக்கலாம். ஆனாலும் அனைவரும் ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் என்பதுதான் சனாதன தர்மத்தின் முடிவு.

அய்யாவழி நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி

அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர் இந்த மண்ணில் இருந்து அவதரித்தார். நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் நமக்குள் ஏற்றத்தாழ்வு கிடையாது என்று கூறினார். சனாதானத்திற்கு இரண்டு பிரச்னைகள் இருந்தது. அதில் ஒன்று நமக்குள்ளாகவே  இருந்த ஜாதி ஏற்றத்தாழ்வு, மற்றொன்று பிரிட்டிஷ் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள். அந்த காலகட்டத்தில் தான் மகாவிஷ்ணுவாக அய்யா அவதாரம் செய்தார். அய்யாவின் புத்தகத்தை அச்சடிக்க ஆரம்பித்துள்ளோம். கல்வி நிறுவனங்கள், வீடுகள் பள்ளிக்கூடங்களுக்கும் இந்த புத்தகம் செல்ல வேண்டும்.

`அய்யாவழி தான் ஒரே வழி’

உலகம் முழுவதும் வன்முறை உள்ளது. அதை தவிர்க்க அய்யாவழி தான் ஒரே வழி. இந்த புனித நூல் தினமும் வீடுகள்தோறும் வாசிக்கப்பட வேண்டும். தினமும் அகிலத்திரட்டு வாசிக்க வேண்டும் என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். நமது நண்பர்களுக்கும் பிறருக்கும் இதை கொண்டு சேர்க்க வேண்டும். நான் அகிலத்திரட்டில் சில பகுதிகளை படித்துள்ளேன். கலியுகம் முடிந்து தர்ம யுகம் வரும் என்று அய்யா கூறியுள்ளார்.

ஆர்.என்.ரவி

`பிரதமர் மோடி தர்மயுகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்’

பிரதமர் மோடி தர்மயுகத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார். நமக்கு ஒரு கடமை உள்ளது. நாம் அனைவரும் அகிலத்திரட்டு நூலை  ஆழமாக படித்து அந்த செய்திகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

இதற்கு முன்னாள் தேசியத்தை பற்றியும்நாட்டை பற்றியும் தெரிந்த தலைவர் வழி நடத்தவில்லை. 144 கோடி மக்களையும் அய்யா வழியில் பாரத பிரதமர் வழி நடத்துகிறார். வேற்றுமையை மறந்து நாட்டை முன்னேற்றத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. அய்யாவின் செய்தியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பது அன்பான வேண்டுகோளாகும். நாம் ஒரு உறுதிமொழி ஏற்க வேண்டும். அய்யாவை பின்பற்றி இதை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.