2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம் குறித்த பா.ஜ.க பேசிவருகிறது. தற்போது மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க, அந்தத் திட்டத்தை கொண்டுவருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறது.
ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்த இரண்டு சட்டத் திருத்த மசோதாக்களை தாக்கல் செய்ய மோடி அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த இரண்டு மசோதாக்களுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதால், இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இரு மசோதாக்களையும் மத்திய அரசு அறிமுகப்படுத்தும் எனச் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்துவதே `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டம். இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்காக, கடந்த ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது மத்திய அரசு. `ஒரே நாடு; ஒரே தேர்தல் முறை அமலுக்கு வந்தால், பொருளாதார ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பலன் கிடைக்கும்’ என வாதாடியது பா.ஜ.க. எதிர்க்கட்சிகளோ, “இந்தத் தேர்தல் முறை மத்தியில் இருக்கும் பா.ஜ.க வெல்வதற்கு வாய்ப்புகளை உண்டாக்கித் தரும். அதுமட்டுமல்லாமல், இதனால் பல குழப்பங்கள் ஏற்படும். ஜனநாயகத்துக்கும் இது ஆபத்துதான்” என்று இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

இந்தச் சூழலில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு `ஒரே நாடு; ஒரே தேர்தல்’ தொடர்பாக 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், “மக்களவை, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடத்தப்படும். அதிலிருந்து 100 நாள்களுக்குள்ளாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்திலோ, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கவிழ்க்கப்பட்டாலோ, புதிய தேர்தல் நடத்தலாம். இந்தப் புதிய தேர்தல் என்பது அவையின் மீதமுள்ள பதவிக்காலத்துக்கு மட்டுமே பொருந்தும்” எனச் சொல்லப்பட்டிருந்ததே முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதாக்களுக்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதால், இந்தத் திட்டம் மீண்டும் தேசிய அரசியலில் விவாதமாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில், ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் பலவும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின், “ நடைமுறைக்கு ஒவ்வாத, மக்களாட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கை மாநிலங்களின் குரலை அழித்துவிடும். கூட்டாட்சி தத்துவத்தைச் சிதைத்துவிடும். அரசின் ஆட்சி நிர்வாகத்துக்குத் தடையினை ஏற்படுத்தும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை நம் ஆற்றல் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எதிர்ப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்

துணை முதல்வர் உதயநிதியோ, “ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்குக் களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது. இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்கத்தான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்” என்கிறார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயகத்தை நசுக்கவும் செய்கின்ற முயற்சி. இந்த கொடூரமான சட்டத்தை நாடாளுமன்றத்தில் எங்கள் எம்பிக்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். டெல்லியின் சர்வாதிகார செயல்களுக்கு மேற்கு வங்கம் ஒருபோதும் அடிபணியாது” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட `இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றன.
ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள், “இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கும் நிலையில், இது தொடர்பான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வரும். குறிப்பாக, இந்தத் திட்டத்தைக் கொண்டு வர சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு, நாடாளுமன்றத்தின் இரு அவையிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவைப்படுகிறது.

மக்களவையைப் பொறுத்தவரை, 543 எம்.பி-க்களில் மூன்றில் இரண்டு பங்கு என்பது 362 பேர். ஆனால், பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணிக்கு 292 எம்.பிக்களின் ஆதரவுதான் இருக்கிறது. அதேபோல, மாநிலங்களவை மூன்றில் இரண்டு பங்கு என்பது 164. ஆனால், என்.டி.ஏ கூட்டணிக்கு 112 எம்.பிக்கள் தான் இருக்கிறார்கள். எனவே, 2029-ல் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவது பா.ஜ.க-வுக்கு கிட்டத்தட்டச் சாத்தியமில்லாத விஷயம்தான்.
அதேபோல, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்த இரு மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால்கூட, ஒரே நேரத்தில் அனைத்துத் தேர்தல்களையும் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்குவது தொடங்கி பல்வேறு ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, இந்தத் திட்டம் 2034-ல் அமலுக்கு வந்தாலும் வரலாம்” என்கிறார்கள்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
