இரானில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய அறநெறிச் சட்டங்களை மீறினால், மரண தண்டனை அல்லது 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்ற அறிவிப்பு… சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது!
இரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின் 286-வது பிரிவின் கீழ் “பூமியில் ஊழல்” எனக் கருதப்படுவோர்க்கு மிகக் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவுள்ளது. இந்த விதியின் படி, தங்கள் வீடியோ பதிவுகளை வெளிநாட்டு ஊடகங்களோடு பகிரும் பெண்களுக்கு மற்றும் அமைதியாக தங்கள் எதிர்ப்பை வலியுறுத்திப் போராடும் பெண்கள், சிறுமிகளுக்கு மரண தண்டனை விதிக்க நேரிடும் எனச் சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது.
இரானிய அதிகாரிகள் இம்மாத தொடக்கத்தில் “கற்பு மற்றும் ஹிஜாப் கலாசாரத்தை” ஊக்குவித்து புதிய அறநெறிச் சட்டங்களை அறிமுகம் செய்தனர். இச்சட்டத்தின் பிரிவு 37ன் படி, “நிர்வாணம், அநாகரிகமான மற்றும் முறையற்ற ஆடைகளை அணிந்து பிடிபடுவோர்க்கு” கடுமையான தண்டனைகளை அரசு விதிக்கிறது. தண்டனையாக £12,500 வரை அபராதம், கசையடி மற்றும் சிறைத் தண்டனைகளை விதிக்கிறது. மீண்டும் மீண்டும் குற்றத்தைச் செய்வோர்க்கு £15,700 வரை அபராதம், கசையடி அல்லது ஐந்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

புதிய சட்டத்தின் 60வது பிரிவின் படி, “கட்டாயமாக முக்காடு போடுவதை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளைக் கைது செய்ய அல்லது துன்புறுத்துவதைத் தடுக்க முயற்சிக்கும் எவருக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்க நேரிடும்.”
22 வயதான குர்திஷ்த் பெண் மஹ்சா அமினி ஹிஜாப் சரியாக அணியாததால் தடுக்கப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். காவலிலிருந்த வேளையில் அவர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தது. இந்த சம்பவம் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரானிய விதிமுறைகளுக்கு எதிரான வெளிப்படையான எதிர்ப்பில், இளம் மாணவி ஒருவர் தன் ஆடைகளைக் களைந்த வீடியோ கடந்த மாதம் வெளிவந்தது. சமூக ஊடகங்களில் வைரலான இந்த காட்சிகளால் அப்பெண் தெஹ்ரானில் உள்ள மனநல மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாகக் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது இடங்களில் இரானியப் பெண்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மிகக் கடுமையாக மீறியுள்ளதாக அரசு கருதுகிறது. இதைத் தொடர்ந்து இச்சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவர உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஆடைக் கட்டுப்பாட்டை மீறும் பெண்களுக்கென “ஹிஜாப் கிளினிக்குகளை” நிறுவுவதற்கான திட்டங்களையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இது மேலும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
இரானில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களின் தாக்கங்கள் குறித்து அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அமைதியாகக் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தி பெண்கள் உரிமைகளுக்காக வாதிடுவதைக் கூட குற்றமாக ஈரானின் சட்டங்கள் கூறுவதைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது. கட்டாய முகமூடியை அமல்படுத்துவதன் வாயிலாக “மதக் கடமையை” நிறைவேற்றச் செயல்படும் தனிநபர்களுக்கு இந்த சட்டம் தடை விதிப்பதாகத் தோன்றுவதாக இந்த அமைப்பு குறிப்பிட்டது.
“அடக்குமுறை மற்றும் பாலினம் மீதான வெறி கொண்ட ஆட்சியால் பெண்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் மீது தீவிர ஒடுக்குமுறை விதிக்கப்படுவதை இந்த சட்டம் காட்டுகிறது” எனக் குறிப்பிட்டார் இரானிய மனித உரிமை வழக்கறிஞர் நஸனின் ஆஃப்ஷின்-ஜம் மக்கே.
ஊடக நேர்காணலில், ஈரானின் ஜனாதிபதியான மசூத் பெசெஷ்கியன் புதிய சட்டங்களுக்கு எதிரான தன் எதிர்ப்பை தெரிவித்தார். இச்சட்டத்தைச் செயல்படுத்துவதால் இரானிய சமூகத்தில் மேலும் அதிருப்திக்கு உருவாகும் என அவர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.