மத்திய கிழக்கு நாடான சிரியாவை, 53 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அசாத் குடும்பத்தின் ஆட்சியைக் கவிழ்த்திருக்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்!
அசாத் குடும்ப ஆட்சி:
சிரியாவில் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படும் அலாவைட் (Alawite) பிரிவைச் சேர்ந்தவர்தான் ஹபீஸ் அல் அசாத். குடும்பத்தின் பொருளாதாரச் சிக்கலைப் போக்கிக்கொள்ள ராணுவத்தில் இணைந்த ஹபீஸ், ஆட்சியிலிருந்த பாத் கட்சியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். படிப்படியாக உயர்ந்து பாதுகாப்பு அமைச்சரான அவர், 1971-ல் சிரியாவின் அதிபராகவும் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சிகளை அடக்கி, ஜனநாயக முறைகளை ஒழித்துக்கட்டிவிட்டு, சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்திய ஹபீஸ், தனக்குப் பிறகு தன் மகன் பஸலை அதிபராக்கும் முடிவிலிருந்தார்.
ஹபீஸின் மற்றொரு மகனான பஷார், லண்டனுக்குச் சென்று கண் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார். 1994-ல், கார் விபத்து ஒன்றில் பஸல் உயிரிழக்க, லண்டனிலிருந்து அவசர அவசரமாக வரவழைக்கப்பட்டார் பஷார். `அடுத்த அதிபர் நீ தான்… அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என ஹபீஸ் கட்டளையிட, தனது மருத்துவக் கனவைக் கைகழுவினார் பஷார். சாகும் வரை (2000-ம் ஆண்டு) சிரியாவின் அதிபர் பொறுப்பிலிருந்தார் ஹபீஸ். அவரது மறைவுக்குப் பின்னர் அதிபரானார் பஷார் அல்-அசாத்.
மேற்கத்திய நாட்டில் கல்வி பயின்ற பஷார் ஆட்சிக்கு வந்தவுடன், ஜனநாயகம், நவீனமயமாக்கல், வளர்ச்சி, கருத்துச் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை ஆகிய கருத்துகளை முன்வைத்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல, அரசுக்கு எதிராகக் கேள்வியெழுப்பியவர்களைப் பாதுகாப்புப் படை கொண்டு ஒடுக்கினார் பஷார். தந்தை வழியில் சர்வாதிகாரப் போக்கை பஷாரும் கையிலெடுக்க, மக்கள் மத்தியில் அவர் மீதான நம்பிக்கை தகர்ந்தது. 2011-ல், பஷாருக்கு எதிராகப் பல போராட்டங்கள் வெடித்தன. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது பஷார் அரசு.
ஆட்சியைக் கவிழ்த்த கிளர்ச்சியாளர்கள்:
அரசை எதிர்த்து `ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற கிளர்ச்சிக்குழு ஒன்று உருவானது. இவர்களோடு சிறு சிறு கிளர்ச்சிக்குழுக்கள் இணைந்துகொள்ள, சிரியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது. ரஷ்யா, இரான் மற்றும் அதன் ஆதரவுக் குழுவான ஹிஸ்புல்லா ஆகியோரின் ஆதரவோடு உள்நாட்டுப் போரை எதிர்கொண்டார் பஷார். துருக்கியும், வளைகுடா நாடுகளும் கிளர்ச்சியாளர்களை ஆதரித்தனர். 13 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த உள்நாட்டுப் போரில், ஐந்து லட்சம் மக்கள் கொல்லப்பட்டதாகவும், 1.20 கோடி மக்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாகவும் சொல்லப்படுகிறது.
இட்லிப் நகரில் மையம் கொண்டிருந்த கிளர்ச்சிக்குழு, தற்போது தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியிருக்கிறது. பஷாரின் ஆட்சிக் கவிழ்க்கப்பட்டதை அடுத்து, சிரியா மக்கள் வீதிகளில் இறங்கிக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்கள். பஷாரோ நாட்டைவிட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சமடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பஷாருக்கு ஆதரவு வழங்கிய ஹிஸ்புல்லா, இஸ்ரேலுடனான போரில் பேரிழப்பைச் சந்தித்தது. அதேபோல, உக்ரைனுடனான போரில் ரஷ்யா அதீத கவனம் செலுத்தி வந்ததால், பஷாருக்கு ராணுவ உதவிகள் வழங்குவதைக் குறைத்துக்கொண்டது. இந்த இரு காரணங்களையும் தங்களுக்குச் சாதகமாக்கி ஆட்சியைப் பிடித்திருக்கிறார்கள் கிளர்ச்சியாளர்கள்.
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் முகமது அல்-ஜவ்லானி இனி சிரியாவை வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பஷாரால் நியமிக்கப்பட்ட பிரதமர் முகமது ஜலாலி, `கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து ஆட்சியை வழிநடத்தத் தயார்’ என்றும் அறிவித்திருக்கிறார்.
இந்தியாவுக்குப் பாதிப்பா?
முன்னாள் பிரதமர் நேரு காலத்திலிருந்தே சிரியாவுடன் நல்ல நட்புறவு வைத்திருக்கிறது இந்தியா. இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பிலுள்ள பல்வேறு இஸ்லாமிய நாடுகளும், காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பக்கம் நிற்கின்றன. ஆனால், இஸ்லாமிய நாடான சிரியா எப்போதும் இந்தியா பக்கமே நின்றிருக்கிறது. `காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை’ என்பதே பஷார் அரசின் கொள்கையாகவும் இருந்தது. எனவே, இந்தியாவுடனான சிரியாவின் உறவு சுமுகமாக இருந்துவந்தது.
தற்போது, துருக்கி ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் ஆட்சியை வழிநடத்த இருப்பதால், இந்த நிலைப்பாட்டிலிருந்து சிரியா மாறிவிடும் என்ற அச்சம் கிளம்பியிருக்கிறது. ஏனென்றால், காஷ்மீர் விவகாரத்தில் எப்போதுமே துருக்கி, இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டிருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, சிரியாவின் எண்ணெய் தொழிலில் இரண்டு முக்கிய முதலீடுகளைச் செய்திருக்கிறது. மேலும், சிரியாவின் அனல்மின் நிலையத் திட்டம் ஒன்றுக்கு 240 மில்லியன் அமெரிக்க டாலரை கடனாக வழங்கியிருக்கிறது. “பஷார் ஆட்சியைக் கவிழ்த்திருக்கும் கிளர்ச்சியாளர்கள், இந்தியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, இந்தியாவின் முதலீடுகளுக்கும், வழங்கிய கடனுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது” என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.
சிரியாவில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை இந்திய வெளியுறவுத்துறை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
