சர்ச்சையைக் கிளப்பிய டங்ஸ்டன் விவகாரம்!
மதுரை அருகில் உள்ள மேலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டதாகச் செய்திகள் வெளியாகின. இதற்கு அந்த பகுதி மக்கள் தொடங்கி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரை பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குச் சுரங்கம் அமைக்க வழங்கப்பட உரிமத்தை ரத்து செய்யச் சொல்லி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் சமீபத்தில் கூடிய சட்டசபையில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி பேரவையில் அரசின் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தைக் கொண்டுவர அனைத்து கட்சிகளிடமும் கார சார விவாதம் நடைபெற்றது. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையில் பெரும் வார்த்தை போர் வெடித்தது.
கொளுத்திப் போட்ட எதிர்க்கட்சித் தலைவர்!
இந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, “பிரதமருக்குத் தமிழக முதல்வர் 20.11.2024 அன்று கடிதம் எழுதியதாகத் தெரிவிக்கிறது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் 3.10.2023 அன்று ஒரு கடிதம் எழுதியதாகவும், 2.11.2023 அன்று மத்திய அரசிடமிருந்து பதில் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடிதத்தின் முழு விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. இந்த சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து சட்டத்திருத்தத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கலாம். அதனைச் செய்ய அரசு தவறிவிட்டது. நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஏலத்தை நடத்தியிருக்கிறார்கள். தமிழக எம்.பி-க்கள் பணியைச் செய்யத் தவறிவிட்டார்கள்.

இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தின் உரிமம் இறுதி செய்யப்படும் வரை சுமார் பத்து மாத கால இடைவெளி இருந்தது. அந்த காலகட்டத்தில் அரசு எதிர்ப்பைத் தெரிவித்திருக்கலாம். அப்படி எதையும் அரசு செய்யவில்லை. ஒப்பந்தம் கோருவதை எதிர்த்து மாநில அரசு எதுவும் சொல்லவில்லை என்று மத்திய சுரங்கத்துறை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறது. தமிழக அரசு உரிய நேரத்தில் எந்த கருதும் மத்திய அரசுக்குத் தெரிவிக்காததால் இந்நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கியதால், வேறு வழியில்லாது பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறது தி.மு.க அரசு. இப்போது இந்த தனித் தீர்மானமும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.” என்றார் காட்டமாக.
பதில் சொன்ன முதல்வர்!
டங்ஸ்டன் விவகாரம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், “திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட சமயத்தில் நாடாளுமன்றத்தில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்திருக்கிறார்கள். மதுரையில் மக்கள் போராட்டம் நடத்தும்போது மதுரையைச் சேர்ந்த அமைச்சர் மூர்த்தி அந்த பகுதி மக்களைச் சந்தித்துப் பேசி போராட்டத்தைக் கைவிடும்படியும், அரசு உங்கள் பக்கம் நிற்கும் என்றும் உறுதியளித்திருந்தார். சட்டத்திருத்தம் கொண்டுவந்த சமயத்தில் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தது பதிவாகியிருக்கிறது. மத்திய அரசு பெரும்பான்மையாக இருக்கும்போது எப்படித் தடுக்க முடியும். அ.தி.மு.க காவேரி விவகாரத்தில் தடுத்து நிறுத்திவிட்டதா? இந்த பிரச்னையை அவ்வப்போது சுட்டிக் காட்டியிருக்கிறோம், கடிதம் எழுதியிருக்கிறோம்.

எந்த காரணத்தாலும் தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்க திட்டம் வருவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி ஒருவேளை சுரங்கம் வந்தால் நான் இந்த முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன். தயவு கூர்ந்து இந்த தீர்மானத்தை நிறைவேற்றித் தாருங்கள்” என்று பேசிய முதல்வர்.
மேலும், “சுரங்கம் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திருத்தச் சட்டத்தை அ.தி.மு.க நாடாளுமன்றத்தில் ஆதரித்துப் பேசிவிட்டு இங்கு வந்து நாடகமாடுவது அ.தி.மு.க-வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. டெல்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது” என்று முதல்வர் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
ஸ்கோர் செய்தது யார்?
இந்த விவகாரத்தில் ஸ்கோர் செய்தது யார் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம், “உண்மையைச் சொல்லப்போனால், தி.மு.க-வின் திட்டம் நிறைவேறியிருக்கிறது. இந்த இரண்டு நாள் பேரவை தொடரில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் பேசவுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இந்த சூழலில், முதல் நாள் அவை முழுவதுமே டங்ஸ்டன் விவகாரம் குறித்தே பேசி முடிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க ஆதரித்ததாகச் சொன்ன நிலையில், அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க ஆதரவாகப் பேசிய வீடியோ ஆதாரமாக அமைந்துவிட்டது. அதோடு, நான் மசோதாவை ஆதரித்துப் பேசினேன்.
டங்ஸ்டன் சுரங்க ஏலத்துக்கு உரிமை தர வேண்டும் என்று எந்த நேரத்திலும் பேசவில்லை என்று பதில் சொல்லியிருந்தார். மொத்தத்தில் எதிர்க்கச் சென்ற அ.தி.மு.க-வுக்கு இப்போது புதிய பிரச்னை கிளம்பியிருக்கிறது. சட்டசபையில் எதிர்ப்பதுபோல எதிர்த்துவிட்டு, அங்கே நாடாளுமன்றத்தில் ஆதரிக்கிறீர்கள் என்று முதல்வர் தொடங்கி தி.மு.க-வினர் அ.தி.மு.க-வினரைக் களமாடிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தம்பிதுரையோ, நான் அந்த மசோதாவை ஆதரித்ததற்குக் காரணமும் அப்போது இருந்த சுழலும் வேறு என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார். அதேநேரத்தில், ஒரு எதிர்க்கட்சியாக அ.தி.மு.க இந்த விவகாரத்தில் மிகக் கடுமையான விமர்சனத்தை அரசின் மீது முன்வைத்திருப்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்” என்றார்கள் விரிவாக!
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/PorattangalinKathai