Syria: சிரியாவிலிருக்கும் ஜவஹர்லால் நேரு தெருவுக்கு என்னவாகும்? இந்தியாவுடனான உறவு நீடிக்குமா?

சிரியா நாட்டில் அசாத் குடும்ப ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

1950 முதல் இந்தியா – சிரியா இடையே ராஜாந்திர உறவுகள் இருந்து வருகிறது.

சிரியா

பல தசாப்தங்களாக இந்தியா சிரியா உறவு பல அரசியல் புயல்களைக் கடந்தும் நிலைத்திருக்கிறது. அசாத் குடும்பத்தின் கடைசி அதிபரான பஷர் அல்-அசாத் வெளியேற்றத்துக்குப் பிறகு என்னமாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தியாவுடன் நின்ற சிரியா

1970 -ல் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார் ஹஃபிஸ் அல்-அசாத். அவரது ஆளுகையின் கீழ் இந்தியாவைப் போன்றே மதசார்பற்ற கொள்கையைப் பின்பற்றியது சிரியா. அசாத் குடும்பம் பல முக்கிய பிரச்னைகளில் இந்தியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் பிரச்னையின் போது பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் பாகிஸ்தானின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளித்தபோது இந்தியாவுக்கு ஆதரவளித்த ஒருசில நாடுகளில் சிரியாவும் ஒன்று.

Indian Pm Met Syrian President

அசாத் குடும்பம் கொண்டிருந்த கொள்கைகள் இந்தியாவின் கொள்கைகளுக்கு ஆதரவாக இருந்ததால் இரண்டு நாட்டுகளுக்கும் இடையில் வலுவான ஒத்துழைப்பு இருந்தது.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டபோது பல நாடுகள் இந்தியாவின் செயலைக் கண்டித்தன. ஆனால் சிரியா அதுகுறித்து, “அது இந்தியாவின் உள் விவகாரம்” எனக் கூறியது.

இந்தியாவுக்கு அபாயம்:

பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு வெளியேறியதுடன் அசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தீவிர இஸ்லாமிய குழுக்களின் கை சிரியாவில் ஓங்கும்போது இந்தியா பல சவால்களைச் சந்திக்க நேரிடும்.

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு ஆதிக்கம் அதிகரித்தபோது ஈரான் மற்றும் ரஷ்யா பக்கபலமாக இருந்து சிரிய அரசைக் காத்துவந்தது. ஆனால் இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் சிரிய அரசுக்குப் போதிய அளவில் அதன் கூட்டாளிகளால் வலுசேர்க்க முடியவில்லை. இதனால் மீண்டும் தீவிர இஸ்லாமிய குழுக்கள் சிரிய ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தும் அபாயம் எழுந்துள்ளது. அப்படியான நிலை ஏற்பட்டால் மத்திய கிழக்கைத் தாண்டியும் அதன் தாக்கம் நீடிக்கும்.

ஐஎஸ்ஐஎஸ் போன்ற ஒரு இயக்கத்தின் மறுமலர்ச்சி இந்தியாவுக்கு நேரடிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உருவாக்கும்.

சிரியா-தலைமையிலான அரசு (Syrian-led political process)

இதனால் சிரியாவைச் சேர்ந்தவர்களின் தலைமையிலான அரசு அமையவேண்டும் என வலியுறுத்துகிறது இந்தியா.

“நாங்கள் சிரியாவின் நிலையைக் கண்காணித்து வருகிறோம். எல்லா தரப்பினரும் இணைந்து ஒற்றுமையையும், இறையாண்மையையும் சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டுக்காட்டுகிறோம். சிரிய சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலன்கள் மற்றும் விருப்பங்களை மதிக்கும் அனைவரையும் உள்ளடக்கிய சிரியா தலைமையிலான அரசியல் செயல்முறை தேவை எனப் பரிந்துரைக்கிறோம். சிரியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்புக்காக டமாஸ்கஸ்ஸில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருக்கிறது” என்கிறது இந்தியாவின் வெளியுறவுத்துறை அறிக்கை.

Indian Foreign affairs minister Jaishankar

இந்தியா எப்போதும் ஐக்கிய நாடுகளுக்கான பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரைக்கு ஏற்ப பிற நாட்டு சக்திகளின் தலையீடு இல்லாத சிரியாவைச் சேர்ந்த சக்திகளின் தலைமையையே வலியுறுத்தி வந்திருக்கிறது.

சிரியாவில் உள்நாட்டுப் போர் (Syria Civil War) உச்சத்தில் இருந்தபோதிலும்கூட டமாஸ்கஸ்ஸில் இந்தியத் தூதரகம் செயல்பட்டு வந்துள்ளது. சிரிய பிராந்தியமான கோல்டன் ஹைட்ஸ் பகுதியை இஸ்ரேல் உரிமை கோரியபோது இந்தியா சிரியாவுக்கு ஆதரவாக நின்றது. 2010ம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் டமாஸ்கஸ் பயணத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

கடந்த ஆண்டு துருக்கி மற்றும் சிரியாவில் பேரிடர் ஏற்பட்டபோது இந்தியா ஆப்ரேஷன் தோஸ்த் (Operation Dost) மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.

பொருளாதார மற்றும் வணிக உறவுகள்

இந்தியா-சிரியா உறவு இராஜாந்திர ரீதியானது மட்டுமானது அல்ல. 2003ம் ஆண்டு சிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் வாஜ்பாய் உயிரி தொழில்நுட்பம், சிறு தொழில்கள் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். டமாஸ்கஸில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையம் அமைய இந்தியா 25 மில்லியன் டாலர் கடன் மற்றும் ஒரு மில்லியன் டாலர் மானியம் வழங்கியது.

2008ம் ஆண்டு இந்தியா வந்த பஷர் அல்-அசாத், விவசாய ஒத்துழைப்புக்கான திட்டங்கள் மற்றும் சிரியாவின் பாஸ்பேட் வளங்கள் பற்றிய ஆய்வுகள் குறித்து ஒப்பந்தங்களை மேற்கொண்டார். பதிலுக்கு இந்தியா சிரியாவில் தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் அமைக்க முன்வந்தது.

Syrian Rebel Leader Abu Mohammad Al-Julani

கடந்த 2022ம் ஆண்டு சிரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஃபைசல் மக்தத் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். அந்த வருகைக்குப் பிறகு, இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “சிரியாவில் மின் உற்பத்தி ஆலை மற்றும் எஃகு ஆலையைக் கட்ட 280 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதி உதவியை இந்தியா வழங்கும்,” என்று குறிப்பிட்டிருந்தது.

இந்தியா ஜவுளி, இயந்திரங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. பருத்தி மற்றும் பாஸ்பேட் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடைசியாக கடந்த ஆண்டு முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளிதரன் பஷர் அல்-அசாத்தைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.

ஜவஹர்லால் நேரு தெரு

1957-ம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அமெரிக்கா செல்லும் வழியில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ்ஸுக்குச் சென்றார். இரு நாட்டுக்குமான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக டமாஸ்கஸ்ஸின் வரலாற்று சிறப்புமிக்க உமாயுத் சதுக்கத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஜவர்ஹலால் நேரு தெரு எனப் பெயரிட்டனர்.

தற்போது சிரியாவில் ஆட்சியை கைப்பற்றியுள்ள கிளர்ச்சியாளர்கள், குர்திஷ் மக்கள், பிற அமைப்புகளை ஒற்றுமைப்படுத்தவே பெரும் சிரமங்களைக் கடக்க வேண்டும். கிளர்ச்சியாளர்கள் வெற்றியினால் மதச்சார்பற்ற அரசியலமைப்பு அடிப்படையில் ஆட்சி செய்யப்பட்ட சிரியா, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற தீவிரவாத இயக்கங்கள் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வளரும் வாய்ப்புகள் உள்ளது.

ஏற்கெனவே கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதிகளில் , பழைமைவாத மற்றும் சில சமயங்களில் கடுமையான சுன்னி இஸ்லாமிய சித்தாந்தத்தை முன்னிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுதான் சிரியாவின் ஜவர்ஹலால் நேரு சாலை அதே பெயரைக் கொண்டிருக்குமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.