பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத கட்டுமானம் என்ற பெயரில் பெரும்பாலும் சிறுபான்மையினருக்கெதிராக நடைபெறும் புல்டோசர் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது. அதாவது, “அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்கக் கூடாது. இடிப்பு உத்தரவை மேல்முறையீடு செய்ய கட்டட உரிமையாளருக்கு வாய்ப்பு தர வேண்டும். 15 நாள்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். முறையான வழிகாட்டுதல்கள் மீறி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளே தங்களின் சொந்த செலவில் அதைச் சரி செய்ய வேண்டும்” என்பது உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் 185 வருட பழமையான மசூதியின் ஒரு பகுதியை உள்ளூர் அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்திருக்கின்றனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், சட்டவிரோத கட்டுமானம் காரணமாக மசூதியின் சில பகுதிகளை இடிப்பதாக ஆகஸ்ட் 17ஆம் தேதியே நோட்டீஸ் அனுப்பியதாகப் பொதுப்பணித்துறை கூற, மறுபக்கம் மசூதி நிர்வாகிகள், பொதுப்பணித்துறை ஒரு மாத காலம் அவகாசம் தருவதாக உறுதியளித்ததாகக் கூறுகிறது.
இடிப்பு குறித்து, லாலௌலி காவல் நிலையப் பொறுப்பு ஆய்வாளர் பிருந்தாவன் ராய் கூறும்போது, “பண்டா-பஹ்ரைச் நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்கு இடையூறாக இருந்த நூரி மசூதியின் சுமார் 20 மீட்டர் பாரப்பளவிலான பகுதி, செவ்வாயன்று அதிகாரிகள் முன்னிலையில் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.” என்று ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார்.
STORY | UP: Portion of 185-year-old Noori Masjid in Fatehpur demolished for ‘encroachment’
READ: https://t.co/b0sPobocys
VIDEO:
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/LZf5ilbhgU
— Press Trust of India (@PTI_News) December 10, 2024
மேலும், கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் அவினாஷ் திரிபாதி, “ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற மசூதி நிர்வாகம் உட்பட 139 நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே, மசூதியுடன் இணைக்கப்பட்ட கடைகளை அகற்றியது. இப்போது அதன் ஒரு பகுதியை அகற்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இடிக்கப்பட்ட பகுதிகள், இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது செயற்கைக்கோள் மற்றும் வரலாற்றுப் படங்கள் மூலம் தெளிவாகிறது. எனவே, ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி மட்டுமே அகற்றப்பட்டிருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.

மறுபக்கம், இதனை மறுத்த மசூதி நிர்வாகக் குழுவின் தலைவர் முகமது மொயின், “லாலௌலியில் உள்ள நூரி மசூதி 1839-ல் கட்டப்பட்டது. ஆனால், 1956-ல் தான் இங்கு சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், மசூதியின் சில பகுதிகளை பொதுப்பணித்துறை சட்டவிரோதமானது என்று கூறுகிறது.” என்று தெரிவித்திருக்கிறார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், போலீஸ் மற்றும் விரைவு அதிரடிப் படை அதிகாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
https://bit.ly/VaigainathiNaagarigam