திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை லட்சுமி நகரில் வசித்து வந்தவர் சிலம்பரசன். இவரின் மனைவி அகிலாண்டேஸ்வரி. இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பரசன் சின்னக்கரை பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை சிலம்பரசன் தூக்கிட்ட நிலையிலும், அகிலாண்டேஸ்வரி கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பல்லடம் காவல்துறையினர் இருவரின் சடலங்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், “சிலம்பரசன் கடந்த சில நாள்களாக அதிகமாக மது குடித்து வந்துள்ளார். இது மனைவி அகிலாண்டேஸ்வரிக்குப் பிடிக்காததால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு சிலம்பரசன் அதிகமாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரம் அடைந்த சிலம்பரசன் கத்தியால் அகிலாண்டேஸ்வரியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிலம்பரசனும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், மனைவியின் கழுத்தை கணவர் அறுத்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.