Sanjay Malhotra: ’33 ஆண்டுக்கால அனுபவம்… வருமானத் துறை செயலாளர்’ – யார் இந்த புதிய RBI ஆளுநர்?

இன்றோடு இந்திய ரிசர்வ் வங்கியின் இப்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸின் பணிக்காலம் முடிவடைகிறது. நாளை முதல் இந்திய ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக பதவி ஏற்க உள்ளார் சஞ்சய் மல்ஹோத்ரா.

யார் இந்த சஞ்சய் மல்ஹோத்ரா?

ராஜஸ்தானை சேர்ந்த 1990-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி, சஞ்சய் மல்ஹோத்ரா. இவர் தற்போது நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருமானத் துறையில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நிதி, வரி, மின்சாரம், தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் ஆகிய துறைகளில் இவருக்கு 33 ஆண்டுக்கால அனுபவம் உண்டு.

சவால்கள்…

நிதி அமைச்சகத்தில் பணிபுரிவதற்கு முன்பு, இவர் நிதி சேவைத் துறையில் பணியாற்றியுள்ளார். இதனால் இவருக்கு வங்கி மற்றும் நிதி சேவை குறித்த முன் அனுபவம் உண்டு.

மேலும், இவர் நிதி சேவைத் துறையில் பணியாற்றியப் போது அப்போதைய மற்றும் இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நல்ல நட்பு உண்டு என்று கூறப்படுகிறது.

சவால்கள்…

சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்க உள்ள இந்தக் காலக்கட்டம் மிக மிக முக்கியமானது ஆகும். இவருக்கு பணவீக்கம், பொருளாதார வளர்ச்சியில் தேக்கம், உலக அளவில் போர்கள் மற்றும் பல மாற்றங்கள் ஆகியவை சவாலாக அமைய உள்ளது. இவர் நாளை பதவியேற்றால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நீடிப்பார்.

இன்னும் கிட்டதட்ட இரண்டு மாதங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நிதி அமைச்சகம் மற்றும் இவருக்கு முக்கிய சவாலாக அமைய உள்ளது என்கிறார்கள்.