`விண்வெளி முதல் விவசாயம் வரை… இந்திய ஸ்டார்ட்அப்களுக்குப் பயிற்சி’ – அமெரிக்கத் தூதரகம் அழைப்பு!

புதுடெல்லியில் உள்ள அமெரிக்கன் சென்டரில் வரும் பிப்ரவரி 2, 2025-இல் நடத்தப்படும் பிசினஸ் இன்குபேட்டர் நெக்சஸ், 20-வது கூட்டமைப்பு குழுப் பயிற்சிக்கான (20th Nexus Business Incubator Cohort ) விண்ணப்பங்களை அனுப்பும்படி அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.

விண்வெளி, விவசாயத் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, … உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

‘‘இந்தத் திட்டம்மூலம் தேர்வு செய்யப்படும் 15-இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு, தொழிலை மேம்படுத்தவும், அவர்களது இலக்குச் சந்தைகளை வரையறுக்கவும், தயாரிப்பு/தொழில்நுட்பம்குறித்து சந்தைப் பின்னூட்டங்களைப் பெறவும், தங்கள் நிறுவனங்களைச் சந்தைக்குக் கொண்டுவருவதற்கான மைல்கற்களை உருவாக்கவும் இந்திய மற்றும் அமெரிக்க நிபுணர்களிடமிருந்து சிறப்புப் பயிற்சியைப் பெறுவதற்கான நல்வாய்ப்பு இது.  

அறிவிப்பு

ஒன்பது வாரப் பயிற்சித் திட்டம் இது. மேலும், நான்கு நிறுவனங்களுக்குக் கூடுதல் வழிகாட்டல் வழங்குவதற்காக நெக்சஸ்-இல் நீடிக்க வாய்ப்பளிக்கப்படும். இந்நிறுவனங்களுக்கு கூடுதலாக எட்டு மாதங்கள்வரை இன்குபேட்டர் மற்றும் நெட்வொர்க்ங் வசதியும் வழங்கப்படும்.
இச்சமயத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், நெக்சஸ் நிபுணர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றித் தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வரவும், வாடிக்கையாளர் மற்றும் வருவாய்த் தளங்களை வளர்க்கவும், பொருத்தமாக அமையும் பட்சத்தில், அவர்களது செயல்பாடுகளை விரிவாக்கி நிதியைப் பெறவும் உதவுவதன் மூலம் அந்நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார்கள்.

இந்தியா- அமெரிக்கா

நெக்சஸ்-இன் 20-வது கூட்டமைப்பிற்கான பயிற்சியை வழங்க, அமெரிக்கத் தூதரகம் கனெக்டிகட் பல்கலைக்கழகத்தில் (யூ-கான்) உள்ள உலகளாவிய பயிற்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (GTDI) இணைந்துள்ளது. புது டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் மானியத்தின் மூலம் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பங்களை www.startupnexus.in இணையதளத்தில் ஜனவரி 5, 2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு ஜனவரி 17, 2025-க்குள் தெரிவிக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளது.