சிரியாவில் 50 ஆண்டுகள் நடைபெற்றுவந்த குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 13 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரின் முடிவில் சர்வாதிகாரியாக செயல்பட்டுவந்த பஷர் அல்-அசாத் நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார். சிரிய உள்நாட்டுப்போரில் பல அமைப்புகள் கிளர்ச்சியாளர்களுக்கு உதவியிருக்கின்றன. சில அமைப்புகளையும்… ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளின் இராணுவத்தையும் எதிர்த்து கிளர்ச்சியாளர்கள் பெற்றுள்ள வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றிகளுக்கு காரணமான முக்கிய புள்ளியாக பார்க்கப்படுபவர் 42 வயது தலைவர் அபு முகமது அல்-ஜுலானி.
அபு முகமது அல்-ஜுலானி
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற அமைப்பின் படைத்தலைவர் இவர். தற்போது சிரியாவில் செல்வாக்குமிக்க நபராகவும் மத்திய கிழக்கு அரசியலில் சலசலப்பு ஏற்படுத்தும் சக்தியாகவும் பார்க்கப்படுகிறார்.

பிறப்பில் இவருக்கு வைக்கப்பட்ட பெயர் அகமது ஹுசைன் அல்-ஷரா. சௌதி அரேபியாவின் ரியாத்தில் சிரியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களுக்கு மகனாக 1982ம் ஆண்டு பிறந்தார். மிகச் சிறிய வயதிலேயே போர் அவரைச் சூழ்ந்திருந்தது. காரணம் அவரது குடும்பம் சர்ச்சைக்குரிய கோல்டன் ஹைட்ஸ் பகுதியைச் சேர்ந்தது. 80களின் பிற்பகுதியில் அவரது குடும்பம் சிரியா திரும்பியதும், குழந்தை பருவத்தை டமாஸ்கஸ்ஸில் கழித்தார்.
அல்-கொய்தா
இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் இரண்டாவது இன்டிஃபாடா போர் மற்றும் ஈராக் போரினால் உந்துதல் பெற்று, ஈராக்கில் அல்-கொய்தா இயக்கத்தில் சேர்ந்தார். அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டார். அங்கு பல தீவிரவாத தலைவர்களைச் சந்தித்தார், அமெரிக்காவின் புக்கா முகாமில் சிறைபடுத்தப்பட்டிருந்தபோது அபு பக்கர் அல்-பாக்தாதியைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
(அபு அபக்கர் சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய அரசு அமைக்கும் நோக்கத்தோடு தீவிரவாதத்தில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாத தலைவர்)
2011ம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடங்கியபோது, மீண்டும் சிரியா வந்து ஜபத் அல்-நுஸ்ரா என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இது அல்-கொய்தா-வின் சிரிய கிளை போல செயல்பட்டது. ஆனால் அவரது நோக்கங்கள் சர்வதேச ஜிஹாத்தின் வரம்புகளை மீறியதாக இருந்ததால் 2016ம் ஆண்டு அல்-கொய்தாவை விட்டு வெளியேரினார். அவர் வைத்திருந்த இயக்கத்துக்கு ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) எனப் பெயரிட்டார். அந்த நேரத்தில் அவரும் அபு முகமது அல்-ஜுலானி என்ற பெயரையும் பெற்றார்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் உலக அளவில் கவனம் செலுத்தும் தீவிரவாத இயங்களைப்போல அல்லாமல் சிரியாவில் ஆட்சியமைப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அமைப்பாக உருவானது. இதன் மூலம் சர்வதேச அளவில் சட்டப்பூர்வமான அமைப்பாக அங்கீகாரம் பெற நினைத்தனர்.
ஆனால் அமெரிக்க அரசு HTS அமைப்பை தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. ஜுலானியை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்த அமெரிக்காவின் உத்தரவு இன்றும் நடைமுறையில் உள்ளது.
சிரியாவில் இஸ்லாமிய ஆட்சி!
ஜுலானியின் முயற்சிகளால் சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக HTS வளர்ந்தது.
மற்ற ஜிகாதி அமைப்புகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் விதமாக உடைகளையும் மாற்றினார். மக்கள் தங்களை சட்டப்பூர்வமான அமைப்பாக ஏற்றுக்கொள்வதற்கான மெனக்கெடல்களை மேற்கொண்டனர். அவர்கள் கையில் இருந்த இடங்களை சிரிய பாதுகாப்பு அரசு மூலம் ஆட்சி செய்தனர். மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கினர், வரி வசூலித்தனர், பொதுச் சேவைகளை வழங்கினர். (இவர்களின் மீது சர்வாதிகார போக்கு விமர்சனங்களும் உள்ளன).

இட்லிப்பில் ஜுலானியின் ஆட்சி, பழமைவாத மற்றும் சில சமயங்களில் கடுமையான சுன்னி இஸ்லாமிய சித்தாந்தத்தை முன்னிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அசாத்தின் ஆட்சியைத் தூக்கி எறிந்துவிட்டு தனது இஸ்லாமிய சட்ட விளக்கங்களை முன்வைத்து ஆட்சி நடத்த வேண்டும் என்றே எண்ணினார் ஜுலானி. பிற சர்வதேச சக்திகளுடன் இணைந்து சிரியாவில் ஈரானின் ஆதிக்கத்தை நீக்க வேண்டும் என்பதும் அவரது கொள்கைகளில் ஒன்று. இவரது வெற்றியினால் மதச்சார்பற்ற அரசியலமைப்பு அடிப்படையில் ஆட்சி செய்யப்பட்ட சிரியா, இஸ்லாமிய ஆட்சி நடக்கும் நாடாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலைத்திருப்பாரா ஜுலானி?
சிரியாவின் பிரச்னைகள் வலைப்பின்னல் போல பல சிக்கல்கள் கொண்டது. இவற்றுக்கு மத்தியில் பல சரியான யுத்திகளை வகுத்து எழுந்துள்ளார் அல்-ஜுலானி.
பொது மக்களிடத்தில் செல்வாக்கைப் பெறுவது, அரசியல் சூழ்ச்சிகளில் சிக்காமல் இருப்பது மற்றும் இராணுவ சக்தியை வளர்ப்பது என பல திசைகளில் முனைப்புடன் செயல்பட்டதன் விளைவே இந்த வெற்றி. HTS அமைப்புதான் சிரியாவின் எதிர்காலம் என்ற உறுதிப்பாட்டை பல ஆண்டுகள் முன்னரே வழங்கியது இவரது வெற்றிக்கு காரணம்.
சிரியாவில் உள்ளா மத சிறுபான்மையினரை எப்படி நடத்துவார்… பல இனங்கள் மற்றும் குழுக்களாக பிரிந்திருக்கும் சிரியாவை ஒன்றிணைத்துக்காட்டுவாரா என்பது அவர் முன்னிருக்கும் முக்கிய கேள்வி.
ஆனால் அவர் முன்னே இருக்கும் பாதை நிச்சயமற்றது, எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கும் சாத்தியம் உள்ளது. கூட்டணிகள் மாறவும், பிற வழிகளில் நெருக்கடிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. சிரியாவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப தீவிரவாத இயக்கங்கள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியில் வெற்றிபெற்ற ஜுலானி அரசமைப்பாரா என்பதை இறுதி நொடிவரை உறுதியாக சொல்லிவிட முடியாது. சிரிய நிலத்தின் கதை எப்போதும் நிச்சயமற்றதாகவும் பல கோணங்களைக் கொண்டதாகவுமே இருந்துள்ளது.