கேரள மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும், மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையான கலைத் திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாநில பள்ளி கலைத் திருவிழா அடுத்த மாதம் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.
அந்த கலைத் திருவிழாவின் தொடக்கத்தில் வரவேற்பு பாடலுக்கு நடனம் ஆடுவதற்கு குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்க பிரபல நடிகை ஒருவர் 5 லட்சம் ரூபாய் கேட்டதாக கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து, “பள்ளி கலை நிகழ்ச்சிக்கு வரவேற்பு பாடலுக்காக, குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுக்க முடிவு செய்தோம். அதற்காக நடன ஆசிரியையான பிரபல நடிகையிடம் கேட்டிருந்தோம். பள்ளி கலைத் திருவிழா மூலம் வளர்ந்த அந்த நடிகை பணம் கேட்டது மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. சிலருக்கு பணத்தின்மீது பேராசை உள்ளது. பள்ளிக் கல்வித்துறையால் அந்த தொகை வழங்கமுடியாது என நான் தெரிவித்துவிட்டேன். வேறு பலர் கற்றுக்கொடுக்க தயாராக உள்ளதாகக்கூறி நான் அந்த நடிகையை வேண்டாம் எனக்கூறினேன். நான் அந்த நடிகையின் பெயரை இங்கு கூற விரும்பவில்லை” என திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு நாடக கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் வி.சிவன்குட்டி பேசியிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.

நடன ஆசிரியையும் நடிகையுமான ஆஷா சரத்-தை குறிவைத்தே அமைச்சர் சிவன்குட்டி பேசியதாக தகவல் வெளியானது. இதையடுத்து நடிகை ஆஷா சரத் கூறுகையில், “நான் எந்த பலனையும் எதிர்பார்க்காமல், சொந்த செலவில் குழந்தைகளுக்கு நடன பயிற்சி அளித்தேன். ஆனாலும், சம்பளம் வாங்க வேண்டுமா, வேண்டாமா என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முடிவாகும். ஒவ்வொரு கலைஞருடைய மதிப்பையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். கடந்த கலைத் திருவிழாவில் குழந்தைகளுடன் நடனம் ஆடவேண்டும் என மிகவும் ஆசைப்பட்டேன். கலை நிகழ்ச்சிகள் மூலம் நிறைய கலைஞர்கள் வளர்ந்துவருகிறார்கள். இந்த ஆண்டும் கலை திருவிழாவில் கலந்துகொள்வேன்” என்றார்.
அமைச்சர் வி.சிவன்குட்டியின் கருத்தும், நடிகை ஆஷா சரத்தின் பதிலும் விவாதத்துக்குள்ளானது. இதயடுத்து அமைச்சர் சிவன் குட்டி இந்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் வி.சிவன்குட்டி கூறுகையில், “இதற்கு முன்பு நடந்த பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகளில் நடிகர்கள் துல்கர் சல்மான், மம்முட்டி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதற்காக அவர்கள் பணம் எதுவும் வாங்கவில்லை. 14000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்ளும் மாநில பள்ளி கலைத் திருவிழாவில் 7 நிமிடம் மட்டுமே உள்ள நடனத்துக்கு நடன ஆசிரியையும், பிரபல நடிகையுமான ஒருவர் ஐந்து லட்சம் ரூபாய் வேண்டும் என கேட்டிருந்தார். அதற்கு நான் பதில் எதுவும் கூறவில்லை. அதுகுறித்து நான் பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையானது.

மாநில பள்ளி கலை விழாவுக்கான லோகோ வெளியீடு மட்டுமே நடந்துள்ளது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டியது உள்ளது. பள்ளிகளுக்கு இடையான கலை நிகழ்ச்சிகள் கலைத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் தேவையில்லாத சர்ச்சையும், விவாதங்களும் வேண்டாம் என நான் ஏற்கெனவே கூறிய கருத்தை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நடன நிகழ்ச்சிக்கான பயிற்சிக்காக யாரும் நியமிக்கப்படவில்லை. தேசிய கல்விக்கொள்கையை திணிக்க மத்திய அரசு முயல்கிறது. ஏற்கெனவே மத்திய அரசின் கல்விக்கொள்கைக்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை ஒவ்வொன்றாக மத்திய அரசு கையில் எடுத்து வருகிறது” என்றார்.